Last Updated : 20 Sep, 2024 12:45 PM

 

Published : 20 Sep 2024 12:45 PM
Last Updated : 20 Sep 2024 12:45 PM

சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் திருட்டு: 6 பேர் கைது

கோப்புப் படம்

சென்னை: சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கண்டெய்னர் திருடுபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ட்ரெய்லர் லாரி உரிமையாளர் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்று சென்னை துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் பணியை செய்து வருகிறது. பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து கண்டெய்னரில் வரும் சரக்குகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைப்பது இந்த நிறுவனத்தின் பிரதான வேலை.

இந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த ஒரு பிரபல தனியார் நிறுவனத்திற்கு சீனாவில் இருந்து 40 அடி கண்டெய்னரில் லேப்டாப், நோட் பேட் ஆகியவை கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது. இது கடந்த 7-ம் தேதி சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் கண்டெய்னரை ஏற்றி வர கடந்த 11-ம் தேதி ட்ரெய்லர் லாரியை அனுப்பியது.

ட்ரெய்லர் லாரி டிரைவர், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் யார்டுக்கு சென்று பார்த்த போது கண்டெய்னரை காணவில்லை. இது தொடர்பாக தன்னை அனுப்பிய பெங்களூரு நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு டிரைவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை கையாளும் மயிலாப்பூர் தனியார் நிறுவன உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு ரூ.35 கோடி மதிப்பிலான எலெக்ட்ரானிக் பொருட்களில் இருந்த கண்டெய்னர் எங்கே போனது என விசாரித்தனர்.

இது தொடர்பாக மயிலாப்பூர் நிறுவன ஆபரேஷன் மேலாளர் இசக்கியப்பன் துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கண்டெய்னர் டிராக்கிங் ரிப்போர்ட்டை ஆய்வு செய்தபோது, வேறொரு ட்ரெய்லரில் ரூ.35 கோடி மதிப்பிலான எலெக்ட்ரானிக் பொருட்கள் இருந்த கண்டெய்னர் எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது.

தொடர் விசாரணையில் மைலாப்பூர் நிறுவனத்தில் பணியாற்றும் இளவரசன் என்பவர் திருட்டுக் கும்பலுடன் சேர்ந்து இந்த மோசடி வேலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து துறைமுகம் காவல் ஆய்வாளர் சிலம்புச் செல்வன் தலைமையிலான போலீஸார், திருவள்ளூர் மணவாளன் நகரில், பதுக்கிவைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இருந்த கண்டெய்னரை மீட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ட்ரெய்லர் லாரி உரிமையாளர் திருவள்ளூர் மணிகண்டன் (30), லாரிகளை ஏற்பாடு செய்யும் இடைத்தரகர்கள் திருவொற்றியூர் ராஜேஷ் (39), நெப்போலியன் (46) ,சிவபாலன் (46) , திண்டுக்கல் முத்துராஜ் (46), ட்ரெய்லர் லாரி டிரைவர் விழுப்புரம் பால்ராஜ் (32) ஆகிய ஆறு பேரை கைது செய்து இன்று காலை புழல் சிறையில் அடைத்தனர். சம்பந்தப்பட்ட மைலாப்பூர் நிறுவன ஊழியர் இளவரசன், இடைத்தரகர் சங்கரன், டாக்குமென்ட் தயாரிப்பாளர் விக்கி ஆகிய மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x