Last Updated : 14 Sep, 2024 02:03 PM

4  

Published : 14 Sep 2024 02:03 PM
Last Updated : 14 Sep 2024 02:03 PM

பாளையங்கோட்டை: கல்லூரி மாணவியை மது அருந்த அழைத்த பேராசிரியர் கைது

கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் ஜெபஸ்டின்

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவியை இரவு நேரத்தில் தொடர்பு கொண்டு மது குடிக்க வரும்படி அழைத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு பேராசிரியரை தனிப்படைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாநகரப் பகுதியான பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் பிரபல கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 4,000-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த கல்லூரி என்பதாலும் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என சொல்லப்படும் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள முக்கிய கல்லூரி என்பதாலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் இங்கு ஆர்வமுடன் வந்து படிக்கின்றனர்.

இங்கு சமூகவியல் துறை பேராசிரியர்களாக பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ஜெபஸ்டின் (வயது 40), தூத்துக்குடியை சேர்ந்த பால்ராஜ் (40) ஆகிய இருவரும் கடந்த 4-ம் தேதி இரவில் நெல்லை மாநகரப் பகுதியில் ஒரு விடுதியில் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் மது போதை அதிகமாகவே, நள்ளிரவு நேரத்தில், தங்களது துறையில் படிக்கும் குறிப்பிட்ட மாணவி ஒருவருக்கு இருவரும் போன் செய்துள்ளனர்.

முதலில் பால்ராஜ் அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசிக்கொண்டிருக்க, ஜெபஸ்டின் அந்த செல்போனை பிடுங்கி ஆபாசமாக பேசியதோடு, “நாங்கள் 2 பேரும் மது குடித்துக் கொண்டிருக்கிறோம். மது குடிக்க வா” என்று கூறி அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். உடனே ஆத்திரம் அடைந்த பெற்றோர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 5-ம் தேதி புகார் அளித்தனர்.

மறுநாள் அந்தப் புகார் தொடர்பாக போலீஸார் விசாரணையை தொடங்குவதற்குள், இந்தச் சம்பவம் தொடர்பாக நாங்கள் புகார் கொடுத்தால் எனது மகளின் படிப்பு பாதிக்கப்பட்டுவிடும். எனவே மேல் நடவடிக்கை எதுவும் வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் அந்த புகார் மனுவை போலீஸார் கிடப்பில் போட்டுவிட்டனர். அதேசமயம், மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் கூறியதை எழுத்துபூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் இந்த தகவல்களை அறிந்த இந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்பினர் சம்பந்தப்பட்ட பேராசிரியர்களை கைது செய்யாவிட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தெரியவரவே, உளவுத்துறை மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையின் உயரதிகாரி ஒருவர் உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அவரது உத்தரவின் பேரில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஸ் குமார் மீனா, இந்த விவகாரத்தில் சிறப்புக் கவனம் செலுத்தி விசாரணை நடத்தினார்.

பேராசிரியர்களான ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகிய 2 பேரும் மாணவிக்கு போன் செய்து ஆபாசமாக பேசியது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து நேற்று நள்ளிரவு தனிப்படை போலீஸார் தூத்துக்குடி விரைந்தனர். அங்கு ஜெபஸ்டினை கைது செய்தனர். இதற்கிடையில் போலீஸார் வரும் தகவல் அறிந்த பேராசிரியர் பால்ராஜ் தலைமறைவானார். அவரை தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேராசிரியர்கள் மீதும் பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக கூறி இந்திய தண்டனை சட்டம் 74, 75, 79(5) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி பேராசிரியர்கள் மாணவியிடம் நள்ளிரவில் ஆபாசமாகப் பேசி மது குடிக்க அழைத்த சம்பவம் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், தற்போது பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x