Published : 14 Sep 2024 05:37 AM
Last Updated : 14 Sep 2024 05:37 AM

பிஹாரில் பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க மருத்துவரின் பிறப்பு உறுப்பை வெட்டிய நர்ஸ்

பாட்னா: பிஹாரின் சமஸ்திபூர் மாவட்டம்,கங்காபூரில் தனியார் மருத்துவமனை செயல்படுகிறது. கடந்த 11-ம் தேதி இரவு மருத்துவர் சஞ்சய்குமார் சஞ்சு பணியில் இருந்துள்ளார். அன்றிரவு அவரும், 2 நண்பர்களும் சேர்ந்து மருத்துவமனையில் மது அருந்தி உள்ளனர்.

பின்னர் இரவு பணியில் இருந்த நர்ஸை, மருத்துவர் சஞ்சய் குமார் தனது அறைக்கு வரவழைத்து உள்ளார். அப்போது டாக்டரும் அவரது நண்பர்களும் சேர்ந்து நர்ஸை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று உள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க டாக்டரின் பிறப்பு உறுப்பை நர்ஸ் பிளேடால் வெட்டினார். இதில் மருத்துவர் நிலைகுலைந்தார். அவரது நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சூழலை பயன்படுத்தி கொண்ட நர்ஸ் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

அருகில் உள்ள சோளக்காட்டில் மறைந்திருந்த அவர், போலீஸாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் மருத்துவர் சஞ்சய் குமார் சஞ்சு உட்பட 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் மருத்துவர் சஞ்சய் குமார் சேர்க்கப்பட்டார். அவரது நண்பர்கள் சுனில் குமார் குப்தா, அவதேஷ் குமார் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் ஏஎஸ்பி சஞ்சய் பாண்டே கூறியதாவது: கடந்த 11-ம் தேதி இரவு ஒருபெண், 112 அவசர உதவி எண்ணைஅழைத்து உதவி கோரினார். உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு போலீஸார் விரைந்து சென்றனர்.

முதல்கட்ட விசாரணையில் மருத்துவர் சஞ்சய் குமார் சஞ்சுவும் அவரது 2 நண்பர்களும் இரவு பணியில் இருந்த நர்ஸை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருப்பது தெரியவந்தது. முன்கூட்டியே திட்டமிட்டு மருத்துவமனையின் சிசிடிவி கேமராக்களை மருத்துவர் சஞ்சய் குமார் அணைத்துள்ளார். சம்பவ இடத்தில்இருந்து மது பாட்டில்களை கைப்பற்றி உள்ளோம். இவ்வாறு ஏஎஸ்பி சஞ்சய் பாண்டே தெரிவித்தார். பாதிக்கப்பட்ட நர்ஸ் கூறும்போது, “கடந்த 15 மாதங்களாக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். கடந்த 11-ம்தேதி இரவு மருத்துவர் சஞ்சய்குமாரும் அவரது நண்பர்களும் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். தற்காப்புக்காக அவர்களை தாக்கிவிட்டு தப்பிவிட்டேன்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x