Published : 12 Sep 2024 09:00 PM
Last Updated : 12 Sep 2024 09:00 PM
சென்னை: வெளிநாட்டு வேலை என்ற பெயரில் இளைஞர்கள் கம்போடியா அழைத்துச் செல்லப்பட்டு இணைய மோசடிகளில் ஈடுபடுத்தப்படும் சம்பவம் நடைபெற்று வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என டிஜிபி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:“வெளிநாட்டு வேலை தேடும் இளைஞர்கள், போலியான வாக்குறுதிகளை நம்பி வெளிநாடு சென்று அங்கு இணைய மோசடிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு வெளிநாடு அழைத்துச் செல்லப்படுபவர்கள் சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அங்கிருந்து லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கம்பி வேலியிடப்பட்ட மோசடி நடக்கும் வளாகங்களில் அடைத்து வைக்கப்படுகின்றனர்.
அங்கு பெடெக்ஸ் மோசடி, முதலீட்டு மோசடி, சட்ட விரோத கடன் வழங்கும் செயலிகள், திருமண மோசடி, காதல் மோசடி போன்ற இணைய மோசடிகளை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மறுக்கும் பட்சத்தில் மின்சாரம் பாய்ச்சுதல் மற்றும் பிற உடல் ரீதியிலான துன்புறுத்துதலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இவ்வாறு படித்த இளைஞர்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் இணைய அடிமைத்தனத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக காவல்துறை முன்னோடியாக திகழ்கிறது.
இந்த வகையில் வெளிநாடு சென்று தமிழகம் திரும்பாத 1,285 பேரின் விபரம் சிபிசிஐடி பிரிவு போலீஸாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மேலும், சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைத்த இடைத்தரகர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் அதற்கு முன் வேலையின் தன்மை, வேலை செய்யும் இடம் ஆகியவற்றை சரிபார்த்து செல்லவும்.
இதையும் மீறி யாரேனும் பாதிக்கப்பட்டால் காவல் கண்காணிப்பாளர் (9498654347) வெளிநாட்டு தமிழர்கள் பிரிவு (டிஜிபி வளாகம்) மற்றும் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்த்துறை ஆணையரகத்தின் உதவி எண்களான 18003093793 (இந்தியாவில் உள்ள உறவினர்கள் தொடர்பு கொள்ள), 8069009901 (வெளிநாட்டில் பாதிக்கப்பட்டவர் தொடர்பு கொள்ள), மிஸ்ட்டு கால் கொடுக்க 8069009900, ஆகிய எண்களைப் பயன்படுத்துமாறு, அதில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT