Published : 12 Sep 2024 05:33 PM
Last Updated : 12 Sep 2024 05:33 PM

ஆயுள் கைதி சித்ரவதை விவகாரம்: வேலூர் சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

வேலூர் சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி மற்றும் சிறை (பொறுப்பு) கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் 

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி மீதான திருட்டு புகாரில் தனிச்சிறையில் அடைத்து துன்புறுத்தியதாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த சிவக்குமார் என்பவர் வேலூர் சரக சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமியின் வீட்டில் கடந்த சில மாதங்களாக முறைகேடாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். அப்போது, டிஐஜி வீட்டில் ரூ.4.25 லட்சம் பணத்தை சிவக்குமார் திருடிய குற்றச்சாட்டால் அவரை தனிச்சிறையில் அடைத்து சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் வேலூர் தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், நீதிபதி ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில், வேலூர் சிறையில் இருந்து தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். மேலும், விதிகளை மீறி டிஐஜி வீட்டில் சிவக்குமார் பணியில் அமர்த்தியது, திருட்டு புகாரில் சிவக்குமாரை தனிச்சிறையில் அடைத்து சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, மத்திய சிறை (பொறுப்பு) கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான், ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் மெய்க்காவலர் ராஜூ உள்ளிட்ட 14 பேர் மீது வேலூர் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேலூர் மத்திய சிறையில் ஆய்வு நடத்திவிட்டு வெளியே வந்த சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர் தயாள்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சென்னை சிபிசிஐடி -1 எஸ்பி வினோத் சாந்தாராம் நியமிக்கப்பட்டுள்ளார். சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 20-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையடுத்து, தற்போது சேலம் மத்திய சிறையில் உள்ள சிவக்குமாரிடம் சிபிசிஐடி எஸ்பி வினோத் சாந்தாராம் விசாரணை நடத்திய நிலையில் வேலூர் மத்திய சிறையில் இன்று விசாரணை நடத்தினார். அப்போது, மத்திய சிறையின் மருத்துவர் சரவண பாபு மற்றும் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாருடன் இருந்த சக கைதிகளான அமல்ராஜ், மணிகண்டன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதுடன் அதை வீடியோவில் பதிவு செய்துகொண்டனர்.

இந்நிலையில், வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை சரக சிறைத் துறை டிஐஜி முருகேசன் வேலூர் சரக கூடுதல் பொறுப்பை கவனிக்க உள்ளார். அதேபோல், சிபிசிஐடி வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள வேலூர் ஆண்கள் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையின் (பொறுப்பு) கண்காணிப்பாளராக இருந்த கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், சென்னை புழல் 2-க்கு அயல் பணியாக மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு கண்காணிப்பாளராக உள்ள பரசுராமன் வேலூர் மத்திய சிறை, பெண்கள் தனிச்சிறையின் கண்காணிப்பாளராக அயல் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவுகளை சிறைத் துறை டிஜிபி மகேஷ்வர் தயாள் பிறப்பித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக வேலூர் மத்திய சிறையில் டிஜிபி மகேஷ்வர் தயாள் இன்று (செப்.12) ஆய்வு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x