Last Updated : 12 Sep, 2024 02:36 PM

 

Published : 12 Sep 2024 02:36 PM
Last Updated : 12 Sep 2024 02:36 PM

ஆனைமலை | தோட்டத்தில் பதுக்கப்பட்ட 4,500 லிட்டர் எரி சாராயம் பறிமுதல்; குத்தகைதாரர் தற்கொலை

எரி சாராயம் பறிமுதல்

பொள்ளாச்சி: ஆனைமலை அருகே தோட்டத்தில் பதுக்கப்பட்ட 4,500 லிட்டர் எரி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தோட்ட குத்தகைதாரர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தமிழக - கேரளா எல்லையில் உள்ள செம்மணம்பதி கிராமத்தில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு சொந்தமான தோட்டத்தில் எரி சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கேரளா கலால் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கேரளா கலால் துறை துணை ஆணையர் ராகேஷ் தலைமையிலான கலால் துறையினரும் வால்பாறை டிஎஸ்பி-யான ஸ்ரீநிதி தலைமையிலான ஆனைமலை போலீஸார் மற்றும் பேரூர் மதுவிலக்கு போலீஸாரும் இணைந்து செம்மணம்பதியில், எர்ணாகுளம், பெரும்பாவூர், தக்கல் குன்னம்மேல் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த குரியன் கோஸ் என்பவரின் மகன் டோனி (45) என்பவருக்குச் சொந்தமான மாந்தோப்பில் இன்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு எரி சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 150 லிட்டர் கொள்ளளவு கொண்ட 35 கேன்களில் இருந்த 4,500 லிட்டர் எரிசாராயத்தை போலீஸார் கைப்பற்றினர். இதுகுறித்து பேரூர் உட்கோட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த, தோட்டத்தை குத்தகைக்கு எடுத்த சபீஸ் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கொல்லம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே மாந்தோப்பு உரிமையாளர் டோனியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், “செமணாம்பதியில் டோனி என்பவர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்த சபீஸ் மீது கேரளா கலால் துறையில் தோட்டத்தில் எரிசராயம் பதுக்கியதாக ஏற்கெனவே வழக்கு உள்ளது. சபீஸின் நடவடிக்கைகளை கேரளா கலால் துறையினர் தொடர்ச்சியாக கண்காணித்து வந்ததால் கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதியில் உள்ள மாந்தோப்பை குத்தகைக்கு எடுத்து அதில் எரி சாராயம் பதுக்கி வைத்துள்ளார்.

கள்ளில் கலந்து விற்பதற்காக எரி சாராயம் கொதிக்க வைக்கப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எரி சாராயம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர். இது குறித்து மாந்தோபுப் பகுதி பொதுமக்கள் கூறுகையில், “செமணாம்பதி கிராமம் தமிழக - கேரளா எல்லையில் உள்ளது.

கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், கோழி இறைச்சி கழிவு மற்றும் கனிமவள கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக இந்த சோதனைச் சாவடியில் 24 மணி நேரமும் போலீஸார் பணியில் உள்ளனர். அப்படி இருக்கையில், கேரளாவில் இருந்து 4,500 லிட்டர் எரிசாராயம் சோதனைச் சாவடியைக் கடந்து தமிழகத்திற்குள் எப்படி வந்தது என்பது குறித்தும் காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்.

ரசாயனம் கலந்த சாராயத்தை குடித்து கள்ளக்குறிச்சியில் 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் கேரளா எல்லையில் உள்ள தமிழகத்தில் எரிசாராயம் பிடிபட்டிருப்பது கோவை மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஆனைமலை போலீஸார் ட்ரோன் உதவியுடன் குன்று பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது எதுவும் பிடிபடவில்லை.

தமிழகத்திற்குள் எரிசாராயம் பதுக்கப்பட்டு இருப்பது கேரளா கலால் துறைக்கு தெரிந்திருந்துள்ள நிலையில் கோவை மாவட்ட தனிப்பிரிவு போலீஸார் கவனத்திற்கு வராதது போலீஸாரின் கவனக் குறைவையே காட்டுகிறது எனவே, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமிழக - கேரள எல்லையில் உள்ள பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி ஆய்வு நடத்த வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x