Published : 11 Sep 2024 04:17 PM
Last Updated : 11 Sep 2024 04:17 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ரூ.2.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தீவிர ஒழிப்புத் திட்டத்தின்படி, விருதுநகர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல் துறையினர் இணைந்த 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகில் உள்ள கடைகளிலும் மற்றும் இதர பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப் படுகிறதா என ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை 571 முறை சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த சோதனைகளின் போது குட்கா விற்பது கண்டறியப்பட்ட 251 கடைகள் மற்றும் 28 வாகனங்களில் இருந்து 1,183 கிலோ 920 கிராம் எடையிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 251 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும் 251 கடைகள் மற்றும் 28 வாகனங்களுக்கும் ரூ.65.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை 9 கடைகள் மற்றும் 1 வாகனத்தில் இருந்து 23 கிலோ 854 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 9 கடைகள் சீல் வைக்கப்பட்டன. 9 கடைகள் மற்றும் 1 வாகனம் என மொத்தம் ரூ.2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT