Published : 10 Sep 2024 04:40 PM
Last Updated : 10 Sep 2024 04:40 PM
கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்துள்ள திருவிடைமருதூர் பிரதானச் சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 கார்களில் இருந்த ஓட்டுநர்கள் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.
கும்பகோணத்தில் இருந்து ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் 5 பேர், மயிலாடுதுறையில் நடைபெற்ற திருமணத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இதே போல், சென்னையில் இருந்து திருவிடைமருதூர் கோயிலுக்குத் தரிசனம் செய்வதற்காக காரில் 4 பேர் வந்து கொண்டிருந்தனர். திருவிடைமருதூர் பிரதானச் சாலையில் இந்த கார்கள் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில், 2 கார்களில் பயணம் செய்த, ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர்களான கும்பகோணம், மடத்துத் தெருவைச் சேர்ந்த ல.ராஜாராமன் (64), அம்மாசத்திரத்தைச் சேர்ந்த ரு.கிருஷ்ணகுமார்(64), திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்த கா.ஆதப்பன் (61), ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியரான செட்டி மண்டபத்தைச் சேர்ந்த சி.சிவமயில்வேலன்(61)
மற்றும் சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த ம.ஞானப்பிரகாசம்(61), இவரது உறவினரான சோமசுந்தரம் மனைவி தேன்மொழி(32), இவர்களது மகன் நரேன்(4), 2 கார் ஓட்டுநர்களான, ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியரும், கும்பகோணம், விவேகானந்தன் நகரைச் சேர்ந்தவருமான க.நடராஜன் (62), சென்னை, அம்பத்தூர், ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த மு.சோமு (54) ஆகிய 9 பேர் பலத்த காயமடைந்தனர்.
பின்னர், போலீஸார், அவர்களை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT