Published : 09 Sep 2024 08:05 AM
Last Updated : 09 Sep 2024 08:05 AM

ராமேசுவரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

விபத்தில் உயிரிழந்த ராஜேஷ், மகள்கள் தர்ஷினா ராணி, பிரணவிகா.

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவர் ராமேசுவரம் அருகேதங்கச்சிமடம் வலசை தெருவில் தங்கி, நகைக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பாண்டிச்செல்வி (28). இவர்களுக்கு 2 வாரங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், குடும்பத்துடன் நேற்று முன்தினம் மாலை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வாடகை காரில் சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நள்ளிரவு காரில் ராஜேஷ், மனைவி பாண்டிச்செல்வி, மகள்கள் தர்ஷினா ராணி (8), பிரணவிகா (5), இரண்டு வார ஆண் குழந்தை, ராஜேஷின் மாமனார் செந்தில் மனோகரன் (70), மாமியார் அங்காளஈஸ்வரி (60) ஆகியோர் தங்கச்சிமடத்துக்குப் புறப்பட்டனர்.

வாடகை காரை அக்காள்மடத்தைச் சேர்ந்த சவரி பிரிட்டோ (35) ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை திருப்பத்தூரிலிருந்து ராமேசுவரம் நோக்கி வந்த அரசுப் பேருந்தில் பயணி ஒருவர் திடீரென வாந்தி எடுத்தார். இதையடுத்து, பேருந்து ஓட்டுநர் ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில், பிரப்பன் வலசை அருகே பேருந்தை திடீரென நிறுத்தினார். அப்போது பின்னல் ராஜேஷ் குடும்பத்தினர் வந்த கார், அரசுப் பேருந்தின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ராஜேஷ், அவரது மகள்கள் தர்ஷினா ராணி, பிரணவிகா, மாமனார் செந்தில் மனோகரன், மாமியார் அங்காள ஈஸ்வரி ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் சிக்கிய பாண்டிச்செல்வி, ஆண் குழந்தை,டிரைவர் சவரி பிரிட்டோ ஆகியோரை அப்பகுதி இளைஞர்கள், பேருந்து பயணிகள் மற்றும் போலீஸார் சேர்ந்து, 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, விபத்தில் இறந்த5 பேரின் உடல்களை உச்சிப்புளி போலீஸார் மீட்டு, பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x