Published : 07 Sep 2024 06:20 AM
Last Updated : 07 Sep 2024 06:20 AM

தமிழக கோயிலில் இருந்து திருடி விற்கப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது

தமிழக கோயிலில் இருந்து திருடி விற்கப்பட்ட, ரூ.5 கோடி மதிப்புள்ள கிருஷ்ணர் சிலை அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது. சிலையுடன் டிஜிபி சங்கர் ஜிவால், ஐஜி தினகரன், எஸ்பி சிவக்குமார் உள்ளிட்டோர்.

சென்னை: தமிழக கோயிலில் இருந்து திருடிவிற்கப்பட்ட, ரூ.5 கோடி மதிப்புள்ளகிருஷ்ணர் சிலை அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் சோழர் ஆட்சி காலத்தில் வடிவமைக்கப்பட்ட, கலியுக கல்கி என்ற கலியமர்த்தன கிருஷ்ணர் (குழந்தை கிருஷ்ணர் காலிங்கன் எனப்படும் பாம்பின்மேல் நடனமாடும் நிலையில் உள்ளது) உலோக சிலை அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை அமைப்பிடம் இருப்பதை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த ஆண்டு கண்டறிந்தனர்.

இந்த சிலையை சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூரிடம் இருந்து தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டக்ளஸ் லாட்ச் போர்டுஎன்பவர் ரூ.5 கோடிக்கு வாங்கி இருக்கிறார். மேலும், அவர் 2020-ம்ஆண்டு இறந்துள்ளார் என சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, இந்த சிலையை மீட்கும்முயற்சியில் தமிழக சிலை கடத்தல்தடுப்புப் பிரிவு ஐஜி தினகரன் தலைமையிலான போலீஸார், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், தொல்லியல் துறை அதிகாரிகள் கூட்டாக ஈடுபட்டனர்.

இந்நிலையில் தங்கள் வசம் இருந்த கிருஷ்ணர் சிலையை தாய்லாந்து நாட்டின் பாங்காக் அரசிடம் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை அமைப்பு அதிகாரிகள் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி ஒப்படைத்தனர்.

அதன் பின்னர் இந்த சிலை தாய்லாந்து நாட்டில் உள்ள இந்திய உயர்ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட் டது. இதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட கிருஷ்ணர் சிலை தாய்லாந்து நாட்டிலிருந்து கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி மத்திய அரசின் தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இந்த சிலை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட சிலையை டிஜிபி சங்கர் ஜிவால் பார்வையிட்டார். அப்போது அவர், இந்த சிலை மீட்பு முயற்சியில் ஈடுபட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுஐ.ஜி தினகரன், எஸ்.பி. சிவக்குமார்,புலன் விசாரணை அதிகாரி பாலமுருகன் மற்றும் போலீஸாரை வெகுவாகப் பாராட்டினார்.

மீட்கப்பட்ட கிருஷ்ணர் சிலைகும்பகோணத்தில் உள்ள சிலைகள்தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள எந்த கோயிலில் இருந்து இந்த சிலை திருடப்பட்டது என்பது குறித்தும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x