Published : 05 Sep 2024 04:35 PM
Last Updated : 05 Sep 2024 04:35 PM

வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானை தந்தங்கள் திருட்டு: 4 பேர் கைது; 2 தந்தங்கள் பறிமுதல்

வண்டலூர்: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்கள் அங்கு வேலை செய்துவந்த தற்காலிக பணியாளர் ஒருவரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி தேதி திருடப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவினரும், தாம்பரம் வனச்சரக அலுவலகமும் இணைந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் சென்னை கிறிஸ்தவ கல்லூரி அருகே நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு யானை தந்தங்களை கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட யானை தந்தங்கள் முழுமையாக வளர்ந்த யானையுடையது இல்லை எனவும், ஒன்று ஒரு அடிக்கு மேல் அளவு உள்ளது எனவும், மற்றொன்று பெண் யானையின் தந்தம் எனவும் தெரியவந்தது.

மேலும், விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றிய தற்காலிக ஊழியரான அப்பு (எ) சதீஷ் என்பவரிடம் இருந்து தந்தங்கள் கிடைத்ததாக பிடிபட்டவர்கள் தெரிவித்ததாகவும், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள யானைத் தந்தங்களை சதீஷ் திருடிச் சென்றிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகமும் பூங்காவின் சாதாரண தொழிலாளி யானை தந்தம் கடத்தலில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும், உயிரில் பூங்காவில் இருந்து தந்தங்கள் திருடப்பட்டதா அல்லது வேறு எங்கிருந்தாவது கொண்டுவரப்பட்டதா என இதில் சம்பந்தப்பட்ட மற்றொருவர் கைது செய்யப்பட்டால் தான் தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.

இந்த திருட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் உயிரியல் பூங்காவில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x