Published : 04 Sep 2024 01:37 PM
Last Updated : 04 Sep 2024 01:37 PM

சென்னை அருகே நின்றிருந்த லோடு வேன் மீது கார் மோதி விபத்து: 4 பேர் பலி

கோவளம்: சென்னை கோவளத்தில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில் சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லோடு வேன் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை பார்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான். மலேசியாவில் வேலை செய்கிறார். இவரது மகன் முகம்மது ஆஷிக் (22). இவர் தனது தந்தையுடன் சிறிது காலம் மலேசியாவில் இருந்து விட்டு நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார். இவர் நேற்று மாலை 4 மணிக்கு மலேசியாவில் இருந்து கொழும்பு வழியாக வரும் விமானத்தில் சென்னைக்கு வந்தார். நள்ளிரவு 12.45 மணிக்கு வந்து இறங்கிய அவர் பரிசோதனைகள் முடிந்து 1.30 மணிக்கு வெளியே வந்துள்ளார்.

முகம்மது ஆஷிக்கை வரவேற்று அழைத்துச் செல்ல திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் அஸ்ரப் முகமது (22), ஆதில் முகமது (20), சுல்தான் (23) ஆகியோர் காரில் காத்திருந்தனர். முகம்மது ஆஷிக் வெளியே வந்ததும் அவரது லக்கேஜ்களை காரின் டிக்கியில் ஏற்றிக் கொண்டு நேராக வீட்டிற்குச் செல்லாமல் வண்டலூர் வழியாக கேளம்பாக்கம், மாமல்லபுரம் சென்றனர். அங்கு சிறிது நேரம் ஜாலியாக இருந்து விட்டு காலை 4 மணியளவில் சென்னையை நோக்கி புறப்பட்டனர்.

சுமார் 4.40 மணியளவில் கோவளம் அருகே செம்மஞ்சேரி என்ற இடத்தில் அவர்கள் வந்தபோது சாலையோரம் லோடு வேன் ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. இதை கவனிக்காமல் அதிவேகத்தில் வந்த அவர்களது கார் நின்று கொண்டிருந்த லோடு வேன் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி சம்பவ இடத்திலேயே முகம்மது ஆஷிக் (22) அஸ்ரப் முகமது (22), ஆதில் முகமது (20), சுல்தான் (23) ஆகிய நான்குபேரும் தலை, உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்து நடந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது யாரையும் காப்பாற்ற முடியாத அளவிற்கு உடல் நசுங்கி கிடந்ததால் கேளம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கேளம்பாக்கம் போலீஸார் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விரைந்து வந்தனர்.

இயந்திரங்கள் மூலம் நசுங்கி கிடந்த காரை மீட்டு நான்கு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து பழுதாகி நின்றி லோடு வேன் ஓட்டுநர் மயிலாப்பூரை சேர்ந்த ரங்கநாதன் (55) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x