Published : 03 Sep 2024 06:12 PM
Last Updated : 03 Sep 2024 06:12 PM
விருதுநகர்: விருதுநகரில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் நேற்று இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
இது குறித்து வெளியான தகவல்: விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் வீரமணி. தனியார் பாலிபேக் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மனைவி கனகலதா. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் அலுவலக கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் ஆதி ஸ்ரீவிவேகா (20). மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த முறை நடைபெற்ற உளவியல் தேர்வில் தோல்வியுற்ற ஆதி ஸ்ரீவிவேகா, இம்முறையும் அந்தத் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டுக்கு வந்த அவர் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். அதே வருத்தத்துடன் இரவு வீட்டில் உள்ள படுக்கை அறைக்குச் சென்ற ஆதி ஸ்ரீவிவேகா, மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
சற்று நேரத்திற்குப் பிறகு இதைப் பார்த்த குடும்பத்தினர் ஆதி ஸ்ரீவிவேகாவை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது ஆதி ஸ்ரீவிவேகா ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment