Last Updated : 01 Sep, 2024 06:26 PM

 

Published : 01 Sep 2024 06:26 PM
Last Updated : 01 Sep 2024 06:26 PM

இந்தியா, வெளிநாடுகளில் கால் சென்டர் நடத்தி பலகோடி மோசடி: புதுச்சேரியில் 7 பேர் கைது

கால் சென்டர் மோசடியில் கைதானவர்கள்.

புதுச்சேரி: ஆன்லைன் டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கால் சென்டர் நடத்தி லட்சக்கணக்கான மக்களிடம் பல கோடி மோசடி செய்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியைச் சேர்ந்தவர் கோகிலா. இவர் ஆன்லைன் டிரேடிங் செய்ய இணையதளத்தில் தேடி உள்ளார். அப்பொது குலோபல் சாப்ட்வேர் சொலுஷன் (Global Software Solution) டிரேடிங் என்ற நிறுவனத்தை பார்த்து, அதில் அவருடைய பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்களை பதிவு செய்து உள்ளார். இதையடுத்து பெங்களுரில் இருந்து அவருக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது.

அதில் பேசிய நபர்கள் தாங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், தங்கள் நிறுவனம் உருவாக்கிய ஆட்டோமேட்டிக் ரோபோடிக் சாப்ட்வேர் மூலம் ஆன்லைன் டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதனை உண்மை என நம்பிய கோகிலா அந்த ரோபோட்டிக் சாப்ட்வேர் வாங்குவதற்கு முதலில் அவர்கள் கூறிய யுபிஐ ஐடி-யில் பணம் செலுத்தி உள்ளார். பிறகு டிரேடிங் செய்வதற்கு அவர்கள் கூறிய வங்கிக் கணக்கு மற்றும் யுபிஐ ஐடி-யில் பல தவணைகளாக ரூ.18 லட்சத்தை அனுப்பி உள்ளார்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர்கள் ஒரு ரூபாய் கூட லாபம் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். மேலும் அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோகிலா இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் சீனியர் எஸ்பி கலைவாணன் உத்தரவின்பேரில், எஸ்பி பாஸ்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் மர்ம நபர்ளை கண்டுபிடிக்க கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு இணையவழி தொழில்நுட்பம் மற்றும் நவீன முயற்சிகளான அவரது வங்கி பரிவர்த்தனை, வாட்ஸ் அப், வெப்சைட்ஸ் ஆகிய தகவல்களை ஆராய்ந்தனர். அதில் அவர்கள் பெங்களுர் மற்றும் நெய்வேலியை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் பெங்களுரில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ஆய்வாளர் கீர்த்தி தலைமையில் தலைமைக் காவலர் இருசவேல், காவலர்கள் வினோத், பாலாஜி மற்றும் பெண் காவலர் ஐஸ்வர்யா ஆகியோர்களை கொண்ட தனிப்படை பெங்களுர் விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்த 7 பேர் கும்பலை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கர்நாடகா மாநிலம் பெங்களுரைச் சேர்ந்த முகமது அன்சார், தூபைல் அகமது, பிரவீன், கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த ஜெகதீஷ், ராமச்சந்திரன், பிரேம் ஆனந்த், விமல்ராஜ் ஆகியோர் என்பதும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கால் சென்டர்கள் நடத்தி லட்சக்கணக்கான பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளதும் தெரியவந்தது.

இது தொடர்பாக இன்று (செப்.1) புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்பி கலைவாணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, பொதுமக்களை ஏமாற்றுவதற்கு 2014-ம் ஆண்டு முதல் இந்தியா, துபாய், ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் பல கால் சென்டர்கள் அமைத்து 200-க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி ஏமாற்றி வந்துள்ளனர்.

மேலும் இந்த மோசடிகள் அனைத்துமே துபாயை தலைமை இடமாகக் கொண்டே செயல்பட்டுள்ளது. நெய்வேலியைச் சேர்ந்த நவ்ஷத் கான் அகமது என்பவர் இந்த அனைத்து மோசடிக்கும் தலைமையாக இருந்துள்ளார். அவருடைய மனைவி சவுமியா நாமக்கல்லில் உள்ள கால் சென்டருக்கு உரிமையாளராக இருந்துள்ளார். கால் சென்டரில் பணி செய்த அனைவருக்கும் அவர்கள் பொதுமக்களை ஏமாற்றுவது தெரிந்தே வேலை செய்துள்ளனர். ஆகையால் அவர்கள் அனைவரையும் வழக்கில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் தற்போது துபாயில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுமக்களை ஏமாற்ற பயன்படுத்திய கால் சென்டர்கள் அவர்கள் பதிவு செய்த இடத்தில் எங்குமே இயங்கவில்லை. மேலும் அவர்களை கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக வெளிநாட்டு இன்டர்நெட்டை உபயோகப்படுத்தி உள்ளனர். அவர்களுடைய 64 வங்கி கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்று வங்கி கணக்குகளில் மட்டும் கடந்த 9 மாதங்களில் மோசடி செய்த பணமாக ரூ.56 கோடி வந்துள்ளது.

அதற்கான விபரங்களை வங்கிகளிடமும், ஏமாற்றமடைந்தவர்களிடமும் விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். அவர்களுடைய ஒரே ஒரு வங்கி கணக்கில் மட்டும் ரூ.27 கோடி முடக்கப்பட்டள்ளது. இது சம்பந்தமாக அனைத்து மாநில போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்படும். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நான்கு சொகுசு கார்கள், ஒரு விலை உயர்ந்த பைக், ஈச்சர் வேன், நூற்றுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் பொதுமக்களை ஏமாற்றிய பணத்தில் பெங்களுருவில் சொகுசு பங்களா, ஏற்காடு, புதுச்சேரி மற்றும் கொடைக்கானலில் ரிசார்ட் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் முக்கிய குற்றவாளியான தூபைல் அகமது துபாய் குடியுரிமை பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் இந்த வருடம் மட்டும் இந்தியா முழுவதும் 1,57,346 நபர்களின் விவரங்களை குலோபல் சாப்ட்வேர் சொலுஷன், அல்கோ மாஸ்டர் டிரேடிங், கிளீம் குலோபல் சர்வீசஸ் ஆகிய இணையதளம் மூலம் பெறப்பட்டு இவர்கள் வைத்துள்ளனர். அவர்கள் அனைவரிடமும் விசாரித்த பிறகே எத்தனை நபர்களை ஏமாற்றி உள்ளனர் என்பது தெரியவரும்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x