Published : 29 Aug 2024 05:16 AM
Last Updated : 29 Aug 2024 05:16 AM

“டாக்ஸிக்கு ரூ.500 அனுப்ப முடியுமா?” - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பெயரில் மோசடி; டெல்லி போலீஸில் புகார்

போலி குறுந்தகவல்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில், பணம் கேட்டு சமூக ஊடகத்தில் அனுப்பப்பட்ட தகவல் குறித்து டெல்லி சைபர் பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகம் மூலமாக நடைபெறும் நிதி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் நிதி மோசடி சம்பவங்கள் 166 சதவீதம் அதிகரித்து, மொத்த வழக்குகள் எண்ணிக்கை 36,075-ஆகஉயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கிஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பெயரிலேயே ரூ.500 பணம் கேட்டு சமூக ஊடகத்தில் வெளியான தகவல் வைரலாகியுள்ளது. எக்ஸ் தளத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில் அவரது படத்துடன் ஒரு தகவல் வெளியானது. அதில், ‘‘ஹலோ, நான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட். நான் கன்னாட் ப்ளேஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டேன். நான் கொலீஜியம் அவசர கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். டாக்ஸிக்கு கொடுப்பதற்காக, நீங்கள் ரூ.500/- அனுப்ப முடியுமா? நீதிமன்றத்துக்கு சென்றதும், திருப்பி தந்து விடுகிறேன்’’ என கூறப்பட்டிருந்தது.

இது நம்பும் வகையில் இருப்பதற்காக, முடிவில் ‘இத்தகவல் ஐபேட்டிலிருந்து அனுப்பப்பட்டது’ எனவும் குறிப்பிடப்பட் டிருந்தது.

இத்தகவல் சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கவனத்துக்கு சென்றது. அவர் இந்த மோசடி குறித்து விசாரிக்க டெல்லி சைபர் போலீஸில் புகார் அளிக்கும்படி கூறினார். இதையடுத்து உச்ச நீதிமன்ற அதிகாரிகள் டெல்லி சைபர் பிரிவு போலீஸில் இந்த மோசடி குறித்து புகார் அளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x