Published : 24 Aug 2024 06:28 AM
Last Updated : 24 Aug 2024 06:28 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் பட்டாக்கத்தியுடன் மின்சார ரயிலில் பயணித்தது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 2 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
சென்னை - கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கங்களில், மின்சார ரயில்களில் பயணிக்கும் சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே ‘ரூட் தல’ பிரச்சினை காரணமாக அடிக்கடி மோதல் ஏற்படுவதும், கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியால் ரயில்வே நடைமேடைகளை உரசி செல்வதும் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், சென்னை- சூலூர்பேட்டை ரயில்வே மார்க்கத்தில் நேற்று முன்தினம் சூலூர்பேட்டையில் இருந்து, சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயிலில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பிஏ வரலாறு மற்றும் பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களான, கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், ஆந்திர மாநிலம்-தடா பகுதியை சேர்ந்த தினேஷ் (18) ஆகிய 2 பேர் பயணித்தனர்.
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையப் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, 17 வயது சிறுவன், இடுப்பில் பட்டாக்கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு, தன் நண்பன் தினேஷுடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த பயணிகள் கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படையினர், 17 வயது சிறுவன் மற்றும் தினேஷ் பயணித்த ரயில் பெட்டிக்கு விரைந்து, பட்டாக்கத்தியுடன் பயணித்த 17 வயது சிறுவன், தினேஷ் இருவரையும் பிடித்து, கொருக்குப் பேட்டை ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார், 17 வயது சிறுவனிடம் இருந்து பட்டாக்கத்தியை பறிமுதல் செய்ததோடு, சிறுவன் மற்றும் தினேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு தினேஷ் கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டார்.
17 வயது சிறுவன் நேற்று திருவள்ளூரில் உள்ள இளஞ்சிறார் நீதிகுழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இளஞ்சிறார் நீதிகுழுமம், சிறுவனை மாதம் இருமுறை இளஞ்சிறார் நீதிகுழுமத்தில் உளவியல் ஆலோசனை பெற வேண்டும் என்ற நிபந்தனையோடு, பெற்றோரிடம் ஒப்படைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT