Last Updated : 18 Aug, 2024 01:18 PM

3  

Published : 18 Aug 2024 01:18 PM
Last Updated : 18 Aug 2024 01:18 PM

பழைய நாணயங்களுக்கு பணம்: இணைய விளம்பரத்தை நம்பி ரூ.45 ஆயிரம் இழந்த புதுச்சேரி இளைஞர்

புதுச்சேரி: பழைய நாணயங்களுக்காக வாங்குவதாக இணையத்தில் வந்த விளம்பரத்தை நம்பி வில்லியனூர் இளைஞர் ஒருவர் ரூ 45 ஆயிரத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளதாக சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்தனர்.

வில்லியனூரை சேர்ந்த ஒருவர் பழைய நாணயங்கள் சேகரிப்பதில் ஆர்வம் உடையவராக இருந்துள்ளார். இவர் சமீபத்தில் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பழைய நாணயங்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்குகிறோம் என்று வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்து அதை கிளிக் செய்து அதன் உள்ளே சென்று பல்வேறு விவரங்களை தேடி உள்ளார். அப்போது மர்ம நபர்கள் அந்த வாலிபரை தொடர்பு கொண்டு உங்களிடம் இருக்கின்ற நாணயத்தின் புகைப்படத்தை எங்களுக்கு அனுப்புமாறும் எத்தனை வருடம் பழமை வாய்ந்தது என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியும் என்றும் அதற்கு எவ்வளவு தொகை வேண்டுமானாலும் தருகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

அதை நம்பிய அந்த வாலிபர் தன்னிடம் இருந்த பழங்கால நாணயங்கள் மூன்றை படம் எடுத்து அவர்களுக்கு பேஸ்புக் மூலமாக அனுப்பி உள்ளார். சிறிது நேரம் கழித்து மோசடி நபர்கள் இந்த நாணயங்களை நாங்கள் சோதனை செய்துவிட்டோம். இது 600 ஆண்டுகள் பழமையான நாணயம். ஆகவே ஒவ்வொரு நாணயத்திற்கும் ரூ 5 லட்சம் பணம் தருகிறோம் என்று சொல்லி கட்டு கட்டாக இருக்கின்ற பணத்தை புகைப்படம் எடுத்தும் வீடியோவாக நேரில் லைவ் செய்துள்ளனர்.

மேலும் நாங்கள், நீங்கள் இருக்கின்ற இடத்திற்கு வருவதற்கு 3 மணி நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டு 2 மணி நேரத்திற்கு பிறகு வில்லியனூர் வாலிபரை தொடர்புகொண்டு கோரிமேடு அருகே தங்களை போலீஸார் பிடித்து பணம் கேட்பதாகவும், தங்களிடம் இன்சுரன்ஸ், லைசென்ஸ், சரியான ஆவணங்கள் இல்லாததாலும் எங்களுடைய காரில் ரூ 30 லட்சத்துக்கு மேல் பணம் இருப்பதாலும் இது குறித்து போலீஸ் கண்டுபிடித்து விட்டால் அத்தனையும் போய்விடும் என கூறியுள்ளனர்.

மேலும், உடனே பணம் அனுப்புமாறும் அதனையும் சேர்த்து வந்து கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளனர். இதனை நம்பிய வில்லியனூர் வாலிபர் ரூ.44 ஆயிரத்து 800 பணத்தை அனுப்பியுள்ளார். மேலும் பணம் அனுப்ப அவர்கள் கேட்டதால், வில்லியனூர் வாலிபர் அவர்களுடைய மொபைல் எண் இருப்பிடத்தை சோதனை செய்தபோது அரியானாவில் இருப்பது தெரியவந்தது.

மேலும் மோசடிக்காரர்கள் தொடர்ந்து பணத்தை கேட்டுக் கொண்டே இருந்ததால் பணம் அனுப்ப மறுத்து விட்டார் . உடனே அவர்கள் இணைப்பை துண்டித்து விட்டனர் அதன் பிறகு அவர்களுக்கு தொடர்பு கிடைக்காததால் தான் ஏமாந்து விட்டதை உணர்ந்த அந்த வாலிபர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஏமாற்றியோரை தேடி வருவதாக தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x