Published : 18 Aug 2024 11:47 AM
Last Updated : 18 Aug 2024 11:47 AM

போலி அமெரிக்க டாலர் கொடுத்து மோசடி: ஈரோட்டில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் கைது

ஈரோடு: ஈரோட்டில் போலியான அமெரிக்க டாலரைக் கொடுத்து மோசடி செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவரை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் தேவம்பாளையத்தை சேர்ந்தவர் அசோக்குமார். டிராவல்ஸ் தொழிலில் அனுபவம் உள்ள இவர், வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு, அவர்கள் நாட்டு பணத்திற்கு மாற்றாக, இந்திய ரூபாய்களை மாற்றித் தரும் பணியைச் செய்து வருகிறார். இது தொடர்பாக இணையதளங்களில் விளம்பரமும் செய்துள்ளார்.

இந்நிலையில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு என்பவர், அசோக்குமாரை அணுகி, தான் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி ஜவுளி தொழில் செய்து வருவதாகவும், மருத்துவ சிகிச்சைக்காக அவசரமாக 500 அமெரிக்க டாலருக்கு மாற்றாக, இந்திய ரூபாய்களை வழங்க வேண்டும்’ எனக் கோரியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஈரோடு வந்த நைஜீரிய நபர், அசோக்குமாரிடம் 500 அமெரிக்க டாலரைக் கொடுத்து விட்டு, அதற்கு மாற்றாக, இந்திய மதிப்பில் ரூ. 48 ஆயிரம் பெற்றுள்ளார். நைஜீரியா நபர் கொடுத்த டாலரை, அசோக்குமார் ஆய்வு செய்த போது, அது போலி எனத் தெரியவந்தது.

இதையடுத்து ஈரோடு எஸ்பி ஜவகரிடம், அசோக்குமார் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வுவிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் போலி டாலர் கொடுத்து மோசடி செய்தது உறுதியானது.

கோவை காட்டூர் பகுதியில், இதே போல் போலி கரன்ஸி கொடுத்து மோசடி செய்தது தொடர்பாக, இவர் மீது ஒரு வழக்கு உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, நைஜீரியா நபரை, ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x