Published : 17 Aug 2024 04:39 AM
Last Updated : 17 Aug 2024 04:39 AM

சீன கேமிங் மூலம் ரூ.400 கோடி மோசடி: சென்னை பொறியாளர் உட்பட 4 பேரிடம் தீவிர விசாரணை

புதுடெல்லி: கேமிங் செயலி மூலம் ரூ.400 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 4 பேரை அமலாக்கத் துறைகைது செய்துள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறைஅதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் ஃபிவின் (Fiewin) கேமிங் செயலியை சீனாவைச் சேர்ந்தவர்கள் இயக்கி வந்துள்ளனர். இந்த பந்தய செயலிமூலமாக பலரிடமிருந்து ரூ.400 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு உடந்தையாக இருந்த ஒடிசாவைச் சேர்ந்த அருண் சாஹு மற்றும் அலோக் சாஹு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். செயலியில் மோசடி செய்யப்பட்ட பணம் இவர்களது வங்கி கணக்கில்தான் முதலில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் கிரிப்டோகரன்சிகளாக மாற்றப்பட்டு சீனாவிலிருக்கும் நபருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக அருண் மற்றும் அலோக்ஆகியோருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக வழங்கப்பட்டுள்ளது.

பாட்னாவைச் சேர்ந்த பொறியாளரான சேத்தன் பிரகாஷ் என்பவர்தான் இந்திய ரூபாயை கிரிப்டோகரன்சியாக மாற்றுவதற்கு முக்கியமாக உதவியுள்ளார். அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சீனாவின் கன்சு மாகாணத்தைச் சேர்ந்த பை பெங்யுன் என்பவரின் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததற்காக சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் ஜோசப் ஸ்டாலின் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் நான்குபேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்குநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x