Published : 15 Aug 2024 12:04 AM
Last Updated : 15 Aug 2024 12:04 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு காவல் சரகம் கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது பி.எஸ்.சி., பட்டதாரி இளம்பெண். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை சுமைதூக்கும் தொழிலாளி, தாய் கூலி தொழிலாளி.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, விடுமுறைக்காக இளம்பெண் ஊருக்கு வந்தார். கடந்த 12ம் தேதி இளம்பெண் மட்டுமே வீட்டில் தனியாக இருந்த போது, தெற்குக்கோட்டையை சேர்ந்த கவிதாசன்(25) இளம்பெண் வீட்டுக்கு வந்து, அவரிடம் பேச வேண்டும் என கூறி அழைத்துள்ளார்.
ஆனால், அந்த பெண் வர மறுத்துள்ளார். இதனால், இளம்பெண்ணை வலுகட்டாயமாக, ஆள் நடமாட்டம் இல்லாத கொட்டகை பகுதிக்கு இழுத்து சென்றுள்ளார். அங்கு கவிதாசனின் நண்பர்களான பாப்பாநாடு பகுதியை சேர்ந்த திவாகர் (26), பிரவீன் (20,) 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் இருந்துள்ளனர்.
இதை பார்த்த இளம்பெண் அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது, நான்கு பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதை மொபைலில் வீடியோவாக பதிவும் செய்துள்ளனர்.
பிறகு, 12ம் தேதி இரவு பாதிக்கப்பட்ட பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸில், கவிதாசன் அவர்கள் நண்பர்கள் மீது புகார் அளித்தார். இதனையடுத்து போலீஸார் நேற்று முன்தினம் கவிதாசன், திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், இளம்பெண்ணை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. தற்போது, பாதிக்கப்பட்ட பெண் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், ஒரத்தநாடு ஏ.எஸ்.பி., சகுனாஸ் ஆகியோர் இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கவிதாசன் மீது கடந்த 2020ம் ஆண்டு விவசாயி ஒருவரை கொலை செய்த வழக்கு உள்ளது.
இதே போல பிரவீன் மீது கஞ்சா வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் சிறார் சீர்த்திருத்த பள்ளியிலும், மற்ற மூன்று நபர்கள் நீதிமன்ற காவிலில் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் இவ்வழக்கு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இந்த வழக்கில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை 60 நாட்களில் முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்படும்.
முக்கிய குற்றவாளிக்கு குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டுள்ளோம். ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவர்கள் அரசியல் பின்னணியில் உள்ளார்களா என விசாரித்து வருகிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT