Published : 14 Aug 2024 05:49 PM
Last Updated : 14 Aug 2024 05:49 PM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க தேவைப்பட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் மூலமும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்ற ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எல்.பாலாஜி சரவணன், கோவை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஆல்பர்ட் ஜான் இன்று தூத்துக்குடி மாவட்டத்தின் 33-வது காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பாலாஜி சரவணன் பொறுப்புகளை ஒப்படைத்தார். தொடர்ந்து புதிய எஸ்பி-யான ஆல்பர்ட் ஜான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பது மிக முக்கியம். அதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். கொலை சம்பவங்களாக இருந்தாலும் சரி, விபத்துக்களாக இருந்தாலும் சரி உயிரிழப்புகளைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்ட மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதே எங்கள் முக்கியமான பணி.
ஏற்கெனவே 'மாற்றத்தைத் தேடி' என்ற சமூக நல்லிணக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பள்ளி மாணவர்கள், இளைஞர்களிடம் போதை பழக்கத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாவட்டத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கமான சட்டங்களால் கட்டுப்படுத்த முடியாதபட்சத்தில் தேவைப்பட்டால் குண்டர் தடுப்பு சட்டம் போன்ற தடுப்பு சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கெனவே இருந்த எஸ்பி சிறப்பாக நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த நடவடிக்கைகள் தொடரும். சாதி, மத ரீதியிலான மோதல்களைத் தடுத்து சமூக ஒற்றுமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். கடலோர மாவட்டமாக இருப்பதாலும், சர்வதேச கடல் எல்லைப் பகுதியாக இருப்பதாலும் கடலோர பாதுகாப்புப் படையினருடன் இணைந்து கடத்தலைத் தடுக்க கடலோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். ஏற்றுமதி, இறக்குமதியில் ஏதேனும் தவறுகள் நடந்தாலும் கண்காணிக்கப்படும்.
குற்றங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரவுடிகள் மீது, அவர்களது சொத்துக்களை முடக்குவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தூத்துக்குடி நகரின் போக்குவரத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். மேலும், புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்தும், போக்சோ சட்ட விசாரணை குறித்தும் காவல் துறையினர் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
காவல் நிலையங்களில் ஒரே இடத்தில் நீண்ட காலமாகக் காவல் துறையினர் பணியாற்றுவது தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT