Last Updated : 13 Aug, 2024 12:13 PM

2  

Published : 13 Aug 2024 12:13 PM
Last Updated : 13 Aug 2024 12:13 PM

சென்னையில் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய ரவுடி: துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ

சென்னை: சென்னை டிபி சத்திரம் பகுதியில் போலீஸாரை பீர் பாட்டிலால் தாக்கி தப்பிக்க முயன்ற ரவுடியை பெண் எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை செம்மஞ்சேரி சேர்ந்தவர் ரோகித் ராஜ். இவர் மீது மூன்று கொலை வழக்கு உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மூன்று வழக்குகளில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இவர் மீது அமைந்தகரை, டிபி சத்திரம், அசோக் நகர் ஆகிய மூன்று காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டு இருந்தன. போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாக இருந்த ரவுடி ரோகித் ராஜை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் ரவுடி ரோகித் ராஜ் டிபி சத்திரம் சிமெட்ரி பகுதியில் பதுங்கி இருப்பதாக சேத்துப்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலைச்செல்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவலர்கள் சரவணகுமார், பிரதீப் ஆகியோருடன் இன்று அதிகாலையில் அங்கு சென்ற டி.பி.சத்திரம் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி, ரோகித் ராஜை சுற்றி வளைத்தார். போலீஸாரை கண்டதும் அதிர்ச்சியடைந்த ரவுடி ரோகித் ராஜ் அங்கு கிடந்த பீர் பாட்டிலை உடைத்து போலீஸாரை சரமாரியாக தாக்க ஆரம்பித்தார். இதில் காவலர்கள் சரவணகுமார் பிரதீப் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனால் ரோகித் ராஜை எச்சரிக்கும் வகையில் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி கை துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டார். ஆனாலும் ரவுடி ரோகித் ராஜ் சரணடையாமல் தப்ப முயன்றார்.

இதையடுத்து உதவி ஆய்வாளர் கலைச்செல்வி தற்காப்புக்காக ரவுடி ரோகித் ராஜை சுட்டார். இதில் அவரது வலது காலில் காயம் ஏற்பட்டு அங்கேயே சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட போலீஸார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் காயம் அடைந்த இரு காவலர்களும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி தடயங்களைச் சேகரித்தனர்.

ரவுடி ரோகித் ராஜ் தென் சென்னை தாதா மயிலாப்பூர் சிவகுமார் கொலை வழக்கிலும் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க, ரவுடியை துணிச்சலாக துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் காவல் உதவி ஆய்வாளரை சென்னை காவல் ஆணையர் அருண் பாராட்டினார். ரவுடி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விவகாரம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x