Published : 12 Aug 2024 04:23 PM
Last Updated : 12 Aug 2024 04:23 PM
தஞ்சாவூர்: மத்திய மண்டலத்தில் போலீஸாரால் கைப்பற்றப்பட்ட 1,145 கிலோ கஞ்சா காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் இயந்திரம் மூலம் இன்று அழிக்கப்பட்டது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஓராண்டு காலத்தில் போலீஸாரால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவானது நீதிமன்ற உத்தரவின்படி இன்று தீயிட்டு அழிக்கப்பட்டது. இதற்காக தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவ கழிவுகள் அழிக்கும் கூடத்துக்கு அந்தந்த மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை அம்மாவட்ட போலீஸார் மூட்டைகளாக கொண்டு வந்தனர்.
பின்னர், தஞ்சாவூர் சரக டிஐஜி-யான ஜியா உல்ஹக், அழிக்கப்பட உள்ள கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டு, அந்த மாவட்ட போலீஸாரிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். அதன் பின்னர், அங்கிருந்த போலீஸார் அனைவரும் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து கஞ்சாவை அழிக்கும் பணியை டிஐஜி கொடியசைத்து தொடங்கி வைத்து, அதற்கான இயந்திரத்தில் கஞ்சா பண்டல்களையும், மூட்டைகளையும் போட்டார். தொடர்ந்து நவீன இயந்திரத்தில் கஞ்சா முழுவதும் தீயிட்டு அழிக்கப்பட்டது. இந்த பணியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் விவேகானந்த சுக்லா, ஏடிஎஸ்பி-க்கள் தஞ்சாவூர் முத்தமிழ்செல்வன், புதுக்கோட்டை சுப்பையா, பெரம்பலூர் பாலமுருகன், கரூர் பிரபாகரன், டிஎஸ்பி-க்கள் நாகை முத்துக்குமார், திருவாரூர் இமானுவேல் ராஜ்குமார், அரியலூர் தமிழ்மாறன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டர் இந்த கஞ்சா அழிப்புப் பணியில் பங்கெடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சாவூர் சரக டிஐஜி-யான ஜியா உல்ஹக், "மத்திய மண்டலத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் போலீஸார் மூலம் 2,899 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,625 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று 1,145 கிலோ கஞ்சா இன்று அழிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் காவல் சரகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் கண்டறிப்பட்டு, கைது செய்யப்பட்டு, அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் கஞ்சா கடத்துவதை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா விற்பனை செய்வதை தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகள் போலீஸார் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் சரகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலையாத வகையில் பாதுகாப்பு பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளது” என்று ஜியா உல்ஹக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT