Published : 11 Aug 2024 12:05 AM
Last Updated : 11 Aug 2024 12:05 AM
ராமநாதபுரம்: தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கை தமிழர்களை கள்ளத்தோணியில் மண்டபம் அழைத்து வந்து, அவர்களை கனடா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சட்டவிரோதமாக கள்ளத்தோணியில் அனுப்பி வைக்க இருந்த வழக்கில் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த மண்டபம் வேதாளையை சேர்ந்தவரை பெங்களூரு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சனிக்கிழமை அன்று கைது செய்து பெங்களூரு அழைத்துச் சென்றனர்.
இலங்கையிலிருந்து கடந்த 2021-ம் ஆண்டு இலங்கை தமிழர்கள், சிங்களர்கள் மற்றும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த 38 நபர்களை சட்டவிரோதமாக கள்ளத்தோணியில் தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம் மரைக்காயர்பட்டணம் அருகே உள்ள கடற்கரைக்கு அழைத்து வந்து அவர்களை மண்டபத்தில் தங்க வைத்த பின் சாலை மார்க்கமாக மங்களூரு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 13 இலங்கை தமிழர்கள் மங்களூர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் நடத்திய விசாரணையில் இலங்கை தமிழர்கள் 38 பேரை கனடா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சட்டவிரோதமாக கள்ளத்தோணியில் அழைத்து செல்வதாக கூறி இலங்கையை சேர்ந்த நபர்கள் ஏஜெண்டுகளாக செயல்பட்டு தலா ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வீதம் பெற்று கொண்டு படகு மூலம் தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம் மரைக்காயர்பட்டினம் அனுப்பி வைத்ததாகவும், படகில் வந்த இலங்கை தமிழர்களை மண்டபம் வேதாளை வடக்கு தெருவை சேர்ந்த சீனி ஆபுல் கான் (34) என்பவர் மரைக்காயர்பட்டினத்தில் தங்க வைத்து, பின்னர் கார், பேருந்து, இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றில் தனித்தனியாக மங்களூரு அனுப்பி தங்க வைத்ததாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இவ்வழக்கு பெங்களூரு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இலங்கை தமிழர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்த என்ஐஏ அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு இலங்கை தமிழர்களை சட்டவிரோதமாக அனுப்ப இருந்த வழக்கில் தலைமறைவான மண்டபம் வேதாளையை சேர்ந்த சீனி ஆபுல் கான் என்பவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், பெங்களூரு என்ஐஏ துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அதிகாரிகள் மண்டபம் வந்து வேதாளையில் மறைந்திருந்த சீனி ஆபுல்கானை கைது செய்து, பெங்களூரு அழைத்துச் சென்றனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்தவரை 3 ஆண்டுகளுக்கு பின் என்ஐஏ கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT