Published : 10 Aug 2024 06:07 AM
Last Updated : 10 Aug 2024 06:07 AM

சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களேயான ஆண் சிசு கடத்தப்பட்டதால் பரபரப்பு

மகப்பேறு பிரிவிலிருந்து குழந் தையை ஒரு பெண் கடத்திச் செல்லும் காட்சி, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சேலம்: மருத்துவமனை ஊழியர்போல நடித்து, சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் சிசுவைக் கடத்திச் சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மனைவி வெண்ணிலா. கர்ப்பிணியான இவர்2-வது பிரசவத்துக்காக சேலம்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 5-ம் தேதி அறுவைசிகிச்சை மூலம் வெண்ணிலாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், அவர் இருந்த வார்டுக்குள் வந்த பெண் ஒருவர்,குழந்தைக்கு கண்கள் மஞ்சளாகஇருப்பதாகவும், பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறி, சிசுவை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளார். அந்தப் பெண் மருத்துவமனை ஊழியர் என்று நம்பிய வெண்ணிலா, நீண்ட நேரமாகியும் குழந்தையை திரும்பக் கொண்டு வராததால், மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார்.

விசாரணையில், மருத்துவமனை ஊழியர்போல நாடகமாடி, குழந்தையைக் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் காவல் உதவி ஆணையர் ஷரி சங்கரி தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தைகள் பிரிவு மற்றும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் குழந்தையை கடத்திச் செல்வது தெரியவந்துள்ளது. அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

குழந்தை கடத்தல் சம்பவம், சேலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "சேலம், நாமக்கல்பகுதிகளில் அடிக்கடி குழந்தைகள் கடத்தப்படுவதும், குழந்தையை விற்பனை செய்வதும் தொடர்கிறது. அரசு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தல் கும்பல்,நோயாளிகளின் உறவினர்கள்போல நுழைந்து, பெற்றோர், மருத்துவ ஊழியர்கள் கண்காணிப்புஇல்லாத நேரங்களில் குழந்தைகளை கடத்திச் செல்கின்றனர்.

அடையாள அட்டை... அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பார்க்க வார்டுக்குள் வருபவர்களுக்கு அடையாள அட்டை அல்லது அடையாள எண் தருவதன் மூலம், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கலாம்.

மேலும், சேலம் பகுதியில் குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவியுள்ளதா என்பது தொடர்பாக போலீஸார் விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x