Published : 06 Aug 2024 08:30 PM
Last Updated : 06 Aug 2024 08:30 PM

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் கடிதம்: கடலூர் பள்ளி தாளாளரை தேடும் போலீஸார்!

கொலை மிரட்டல் கடிதத்தைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் வீட்டின் முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் | கோப்புப்படம்

கேளம்பாக்கம்: ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு வேறு நபரின் பெயரில் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியது தொடர்பாக கடலூர் பள்ளி தாளாளர் அருண்ராஜை போலீஸார் தேடி வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில் தனது நண்பனை இந்த கொலை வழக்கில் சிக்க வைத்துள்ளதாகவும், அவனை விடுவிக்காவிட்டால் உங்கள் குடும்பத்தையே காலி செய்து விடுவேன் என்றும் அந்த கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த கடிதத்தை எழுதியவர் என்ற இடத்தில் கேளம்பாக்கத்தை அடுத்த படூர் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த சதீஷ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து செம்பியம் போலீஸார் படூரில் இருந்த சதீஷை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் சதீஷ் அப்பாவி என்பதும் தனியார் பள்ளி ஒன்றில் வேன் ஓட்டுநராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் யார் என்று கூட தெரியாத படூரைச் சேர்ந்த சதீஷ் பெயரை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கோணத்தில் கேளம்பாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் போலீஸாருக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தது.

செங்கல்பட்டைச் சேர்ந்த ரோஸ் நிர்மலா என்பவர் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சில ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்தார். அப்போது அவரிடம் தனியார் நர்சரி பள்ளி அங்கீகாரம் பெறும் விவகாரத்தில் கடலூரைச் சேர்ந்த அந்த பள்ளியின் தாளாளர் அருண்ராஜ் என்பவர் மோதல் போக்கில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பள்ளிக்கான அங்கீகாரத்தை வழங்க ரோஸ் நிர்மலா மறுத்து விட்டார். பின்னர் அந்த பதவியில் இருந்து ரோஸ் நிர்மலா ஓய்வும் பெற்றும் விட்டார்.

இந்நிலையில், தனது பள்ளிக்கு அங்கீகாரம் வழங்க மறுத்ததால் அவரை பழிவாங்குவதற்காக அருண்ராஜ் பல்வேறு செயல்களில் ஈடுபட்டார். ரோஸ் நிர்மலாவின் செங்கல்பட்டு வீட்டின் முன்பும், அவரது மகள் வசித்து வரும் படூர் வீட்டின் முன்பும் பல்வேறு அருவெறுக்கத்தக்க தகவல்களை போஸ்டர்களாக ஒட்டி வந்தார். மேலும், ரோஸ் நிர்மலாவின் மகள் குறித்தும் அவரது வீடு, கடை ஆகிய இடங்களிலும் பல்வேறு போஸ்டர்களை ஒட்டி அசிங்கப்படுத்தி வந்தார்.

இதுகுறித்து ரோஸ் நிர்மலா தாம்பரம் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்ததை தொடர்ந்து கேளம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் அருண்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் படூரைச் சேர்ந்த சதீஷ் தான் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதனால் சாட்சிகளை கலைக்கவும், மிரட்டவும் அருண்ராஜ் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, கோவளத்தில் உள்ள கடலோர காவல் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன் என்று ஒரு கடிதம் இதே படூரைச் சேர்ந்த சதீஷ் பெயரில் கடந்த மாதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த கடிதமும், தற்போது ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு அனுப்பப்பட்ட கடிதமும் ஒரே மாதிரியாக உள்ளது. இரு கடிதங்களிலும் உள்ள எழுத்துருக்கள் ஒரே மாதிரியாக உள்ளன. இதனால் சதீஷை சிக்க வைக்க அருண்ராஜ் தான் இதுபோல் போலியாக கடிதங்களை தயாரித்து கேளம்பாக்கம் போலீஸாருக்கும், ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கும் அனுப்பி இருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அருண்ராஜை பிடிக்க கேளம்பாக்கம் போலீஸார் கடலூர் விரைந்து உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x