Published : 06 Aug 2024 02:33 PM
Last Updated : 06 Aug 2024 02:33 PM
மேட்டூர்: எடப்பாடி காவல் நிலைய வளாகத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதையடுத்து, பெட்ரோல் குண்டை வீசியவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே எடப்பாடி - ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் எடப்பாடி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே நகராட்சி துவக்கப்பள்ளி, இ-சேவை மையம், நூலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி என முக்கிய அலுவலகங்கள் செயல்படுகிறது. இந்நிலையில், எடப்பாடி காவல் நிலைய வளாகத்தில் இன்று அதிகாலை திடீரென அடுத்தடுத்து இரண்டு மர்ம பொருள் விழுந்து வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக சத்தம் கேட்ட பகுதிக்கு சென்று பார்த்தபோது, விழுந்த மர்ம பொருள் திடிரென் வெடித்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக, பற்றி எறிந்த தீயை அணைத்த காவலர்கள், காவல் நிலைய வளாகத்துக்கு வெளியே சென்று பார்த்துள்ளனர். அங்கு யாரும் இல்லாத நிலையில், மர்ம நபர்கள் காவல் நிலையத்துக்குள் பெட்ரோல் குண்டை வீசி இருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், சங்ககிரி டிஎஸ்பி-யான ராஜா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் எடப்பாடி காவல் நிலையத்தில் முகாமிட்டு ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், காவல் நிலையத்துக்குள் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு போன்ற பொருளை வீசியது தெரியவந்தது.
அண்மையில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிலர் மீது எடப்பாடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாரேனும் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து எடப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெட்ரோல் குண்டை வீசிய மர்ம நபரைப் பிடிக்க சங்ககிரி டிஎஸ்பி-யான ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியைத் தேடி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் மர்ம நபர் எடப்பாடி காவல் நிலையத்துக்குள் பெட்ரோல் குண்டை வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT