Published : 06 Aug 2024 01:35 PM
Last Updated : 06 Aug 2024 01:35 PM
சென்னை: சென்னையில் விமான நிலையம், பிரபல தனியார் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்போன், கடிதம், இமெயில் மூலமாக கடந்த ஆறு மாதங்களாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பீதியை ஏற்படுத்தி வருகின்றனர்.
சைபர் க்ரைம் போலீசார் இந்த கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சட்டம் - ஒழுங்கு டிஜிபி பெயரில் போலியான ஒரு இ மெயில் முகவரியை தொடங்கி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தப் பள்ளிக்கு இத்துடன் ஒன்பதாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதே போல சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி, மவுன்ட் ராணுவ பள்ளி ஆகியவற்றுக்கு வெவ்வேறு இமெயில் முகவரிகளில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அதேபோல், தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் துறைக்கு மர்ம நபர் கடிதம் எழுதியுள்ளார். வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்களை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதனிடையே, வெடிகுண்டு மிரட்டல்களை யாரும் நம்ம வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT