Published : 06 Aug 2024 04:30 AM
Last Updated : 06 Aug 2024 04:30 AM
சென்னை: நீச்சல் குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் நீச்சல் பயிற்சியாளர், நீச்சல் குள உரிமையாளர் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை கொளத்தூர் அருகே உள்ள விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் ஆர்.கே.பாலேகர்.
தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரிவு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் கிரித்திக் சபரிஸ்கர் (10). வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி மாணவர். இவர் கொளத்தூர் அசோகா அவென்யூவில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நீச்சல் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
வழக்கம்போல நேற்று முன்தினம் காலை கிரித்திக் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை நீச்சல் குள நிர்வாகத்தினர் சரியான நேரத்தில் கவனிக்காததால், சிறுவன் நீரில்மூழ்கி சுய நினைவை இழந்ததாக கூறப்படுகிறது.
நீச்சல் பயிற்சியாளர் திருவண்ணாமலை மாவட்டம் பண்ணையூரைச் சேர்ந்த அவினேஷ் (24), சிறுவனை மீட்டு அதே பகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், கிரித்திக் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதிர்ச்சி அடைந்த தந்தை ஆர்.கே. பாலேகர் நீச்சல் குள நிர்வாகத்தினரின் கவனக்குறைவே மகனின் இறப்புக்கு காரணம் என குற்றம்சாட்டி கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து நீச்சல் குள உரிமையாளரான சென்னை பெரியார் நகர் அதியமான் நகரைச் சேர்ந்த காட்வின் ஹெக்டர் ஜோசப் பிரவுன்(41), நீச்சல் பயிற்சியாளர் அவினேஷ் ஆகியோரை கைது செய்தனர். முறையான பயிற்சி அளிக்காமல் பயிற்சியாளர்கள் மெத்தனமாக செயல்பட்டதே சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT