Published : 05 Aug 2024 03:48 PM
Last Updated : 05 Aug 2024 03:48 PM
சென்னை: சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் முதல்வர் வாகனம் செல்வதற்காக பாதுகாப்பு கெடுபிடிகளில் போலீஸ் ஈடுபட்டபோது, ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம், கற்பக கன்னியம்மன் கோயில் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கோபினாத். இவரது மனைவி ஷாலினி. இவர்களது 5 வயது மகன் அலோக்நாத் தர்ஷன். இந்நிலையில், நேற்று இரவு (ஞாயிற்றுகிழமை) சிறுவன் தர்ஷன், தாத்தா சேகர் (52) ஓட்டிச் சென்ற ஆட்டோவில் பயணித்தார். கூடவே அவரது பாட்டியும் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த ஆட்டோ மெரினா காமராஜர் சாலை, பொதுப்பணித் துறை அலுவலகம் அருகே சென்றது. அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்ல போலீஸார் கான்வாய் அமைத்தனர். அந்த நேரத்தில் ஆட்டோ சென்றதால், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் திடீரென வழி மறித்ததால் சேகர் ஓட்டி வந்த ஆட்டோ நிலைகுலைந்து கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த தர்ஷன் உடல் நசுங்கி உயிர் இழந்தார்.
போலீஸார் கவனக் குறைவாகவும், தேவை இன்றியும் ஆட்டோவை திடீரென மறித்ததே உயிர் இழப்புக்கு காரணம் என சிறுவனின் உறவினர் வினோத் குமார் குற்றம்சாட்டினார். இந்த விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT