Published : 04 Aug 2024 08:11 AM
Last Updated : 04 Aug 2024 08:11 AM

கோவையில் இருந்து காரில் பொள்ளாச்சிக்கு சென்ற வழக்கறிஞரை படுகொலை செய்த 4 இளைஞர்கள் கைது

கோவை: கோவையில் இருந்து காரில் பொள்ளாச்சிக்கு சென்ற வழக்கறிஞரை, ஒரு தோட்டத்தில் வைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தாபுரம் அருகே உள்ள செந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (47). வழக்கறிஞர். இவரது மனைவி நித்யவள்ளி. தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், வேலை விஷயம் தொடர்பாக பொள்ளாச்சிக்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு நேற்று முன்தினம் உதயகுமார் வீட்டிலிருந்து காரில் பொள்ளாச்சிக்குப் புறப்பட்டுள்ளார். அவருடன் காரில் இருவர் இருந்தனர். மலுமிச்சம்பட்டி அருகே சென்றபோது, உதயகுமாருக்கும், காரில் இருவர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அவர்கள், மேலும் இருவருடன் சேர்ந்து மலுமிச்சம்பட்டி வரத்தோப்பு பகுதியில் ஒரு தோட்டத்தில் உதயகுமாரை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர், அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அவரைக் கொன்றவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

அந்த தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இதுகுறித்து செட்டிபாளையம் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று, உதயகுமாரின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக கருமத்தம்பட்டி டிஎஸ்பி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. இதில், ரத்தினபுரியைச் சேர்ந்த அய்யனார் என்ற செல்வம் (26), கெளதம் என்ற விருமாண்டி (20), அருண்குமார் (26), அபிஷேக்(20) ஆகியோருக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

காரணம் என்ன? இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வழக்கறிஞர் கொலை வழக்கில், 12 மணி நேரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு நிதி நிறுவனத்தில் செல்வம் ஊழியராகப் பணியாற்றியுள்ளார். கடந்த பிப்ரவரியில் அவர் வழக்கறிஞர் உதயகுமாருக்கு ரூ.30 லட்சம் கடன் கொடுத்துள்ளார். பின்னர் செல்வம் வேலையைவிட்டு நின்றுள்ளார். இந்நிலையில், ரூ.30 லட்சம் பணத்தை திருப்பித் தருமாறு உதயகுமாரிடம், செல்வம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால், உதயகுமார் பணத்தைத் தராமல் தாமதப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில், உதயகுமாருடன் காரில் பொள்ளாச்சிக்கு செல்வமும், அவரது நண்பர் கவுதமும் சென்றுள்ளனர். வழியில் கடனைத் திருப்பித் தருவது தொடர்பாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பணத்தை திருப்பித் தர முடியாது என்று உதயகுமார் கூறியதால், தனது கூட்டாளிகள் அபிஷேக், அருண்குமாரை இருசக்கர வாகனத்தில் வரவழைத்து, நால்வரும் சேர்ந்து அவரைக் கொலை செய்துவிட்டு, தப்பினர். தனிப்பட்ட பண விவகாரம் காரணமாகவே கொலை நடந்துள்ளது. வேறு காரணங்கள் இல்லை. இவ்வாறு எஸ்.பி. பத்ரிநாராயணன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x