Published : 03 Aug 2024 09:53 AM
Last Updated : 03 Aug 2024 09:53 AM
திருச்சி: தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் குறிப்பிடத்தக்க தலமாக விளங்குவது சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சமயபுரம் கோயிலுக்கு செல்லும் பிரிவு சாலையில் உள்ள நால்ரோடு பகுதியில் கோயிலுக்கு வரும் பக்தர்களை வரவேற்கும் வகையில் சிமெண்ட் மற்றும் கற்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான வரவேற்பு வளைவு உள்ளது.
இந்த வழியாக செல்லும் அனைவருமே இந்த நுழைவாயிலின் மேல் உள்ள சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் சிலையை வணங்கி செல்வர்.
இந்த நிலையில் நேற்று இரவு சமயபுரம் பகுதியில் இருந்து நெல் கருக்காய் ஏற்றிக் கொண்டு வந்த ஒரு லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நுழைவாயிலின் ஒரு பக்க தூணின் மீது பலமாக மோதியது.
இதில் பக்கவாட்டு தூண் மற்றும் வரவேற்பு வளைவின் மேல் பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வரவேற்பு வளைவின் கட்டுமானம் பலமிழந்துள்ளது. எந்த நேரமும் கீழே விழுந்து விடும் என அஞ்சப்படுவதால் இந்த வழியாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு போலீஸார் அனுமதி மறுத்து சாலையில் தடுப்புகளை வைத்து அவ்வழியாக போக்குவரத்தை தடை செய்துள்ளனர் ஆடி மாதத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு அம்மன் பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT