Published : 03 Aug 2024 07:06 AM
Last Updated : 03 Aug 2024 07:06 AM

சென்னை | நடன நிகழ்ச்சி என துபாய் அழைத்துச் சென்று துணை நடிகைகள், பெண்களை ஓட்டலில் அடைத்து பாலியல் தொழில்

ஓட்டல் அதிபர் ஷகீல்

சென்னை: துபாயில் நடன நிகழ்ச்சி என, சினிமாவில் வாய்ப்பு குறைந்த துணை நடிகைகள், நடன அழகிகள்,இளம் பெண்கள் உட்பட பலரை அழைத்துச் சென்று அங்கு நட்சத்திர ஓட்டல்களில் அடைத்து வைத்து சென்னையைச் சேர்ந்த கும்பல் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், அக்கும்பல் சென்னை மற்றும் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் வறுமையிலுள்ள, வேலை தேடும் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படும் பெண்களை குறிவைத்து அவர்களுக்கும் துபாயில் வேலை வாங்கித் தருவதாகவும், மேலும் ஓட்டலில் நடனமாடும் வேலை பெற்றுத் தரப்படும் எனவும்,மாதம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சம்பளம், உணவுடன் கூடிய தங்கும்இடம் எனவும் விளம்பரம் செய்தது.

இதை உண்மை என நம்பி சென்றவர்களை துபாய் அழைத்துச் சென்று நட்சத்திர ஓட்டல்களில் அடைத்து வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர்.இப்படி, 50-க்கும் மேற்பட்டவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல், கோடிக் கணக்கில் பணம்சம்பாதித்து வருவதாக குற்றச் சாட்டு எழுந்தது.

இந்நிலையில், அக்கும்பலின் பிடியிலிருந்து தப்பி சென்னை வந்தகேரளாவைச் சேர்ந்த 21 வயதுடைய பெண் நடன கலைஞர் ஒருவர், இதுகுறித்து சென்னை காவல் துறையில் அண்மையில் புகாராகத் தெரிவித்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல்ஆணையர் செந்தில் குமாரி, பாலியல் தடுப்பு பிரிவு உதவி ஆணையர் ராஜலட்சுமி தலைமையிலான போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இதில், சம்பந்தப்பட்ட கேரள பெண்ணை, ஆசைவார்த்தை கூறிதுபாய் அழைத்துச் சென்று அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ் ராஜ் (24).தென்காசி மாவட்டம் இலஞ்சியை சேர்ந்த ஜெயகுமார் (40), சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஆஃபியா (24) ஆகியோர் கடந்த மே 30-ம் தேதி கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டனர்.

பாலியல் கும்பல் தலைவராக இருந்த ஓட்டல் அதிபரான கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்தமுஸ்தபா புக்கங்கோட் என்ற ஷகீலை (56) சென்னை போலீஸார்தனிப்படை அமைத்து தேடி வந்தனர். மேலும், அவரை கைது செய்யஅனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஷகீல் கேரளாவில் இருந்து விமானம் மூலம் மீண்டும் துபாய் செல்லஇருப்பதாக சென்னை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து கேரளா விரைந்த சென்னை போலீஸார் அங்கு நேற்று முன்தினம் ஷகீலை கைது செய்தனர். பின்னர், அவரைசென்னை அழைத்து வந்து நீதிமன்றகாவலில் சிறைக்கு அனுப்பினர். முன்னதாக அவரிடமிருந்து செல்போன் மற்றும் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை தனிப்படை அமைத்துபோலீஸார் தேடி வருகின்றனர். துபாயில் பாலியல் கும்பலிடம் சிக்கி உள்ளவர்களின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x