Published : 31 Jul 2024 09:35 PM
Last Updated : 31 Jul 2024 09:35 PM

வேலூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாளே ஆன ஆண் குழந்தை கடத்தல்: போலீஸ் விசாரணை

வேலூர்: வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 3 நாளே ஆன ஆண் குழந்தையை திருடிச்சென்ற பெண் குறித்து காவல் துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர். ஆண் குழந்தை திருடப்பட்ட புகாரை அடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்த காவலாளியை பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியைச் சேர்ந்த கோவிந்தன். இவரது மனைவி சின்னு. கர்ப்பிணியாக இருந்த சின்னு, பிரசவத்திற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சேர்க்கப்பட்டார். அன்று இரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர், பிரசவ வார்டில் இருந்து குழந்தைகள் நல வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு தாய், சேய் இருவரும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்தனர்.

இந்நிலையில், கோவிந்தன் தனது மனைவிக்கு இன்று (ஜூலை-31) காலை 8 மணியளவில் உணவு வாங்கிக் கொடுத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார். தாய் சின்னு உணவருந்திக் கொண்டிருந்தபோது குழந்தை அழுதுள்ளது. அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், "குழந்தையை தான் கவனித்துக் கொள்வதாக கூறி, குழந்தையை வாங்கிக்கொண்டார்.

சிறிது நேரத்தில் குழந்தையையும், அந்த பெண்ணையும் காணாமல் குழந்தையின் தாய் சின்னு திடுக்கிட்டுள்ளார். அந்த வார்டு முழுவதும் தேடியும் இருவரும் கிடைக்காததால், மருத்துவமனை முழுவதும் மருத்துவமனை ஊழியர்கள் உதவியுடன் தேடிப் பார்த்துள்ளனர். பின்னர், ஆண் குழந்தை கடத்தப்பட்டது உறுதியான நிலையில் வேலூர் கிராமிய காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், வேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, காவல் ஆய்வாளர் சுபா மற்றும் காவலர்கள் விரைந்து சென்று குழந்தை கடத்தப்பட்டது குறித்து விசாரித்தனர். மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நீல நிற புடவை கட்டிய பெண் ஒருவர் சுமார் 10 வயதுள்ள சிறுவனுடன் அந்த வார்டில் நடமாடி வருகிறார். வார்டில் இருந்த 2 குழந்தைகளை அவர் கொஞ்சியுள்ளார். பின்னர் சின்னுவின் குழந்தையுடன் இருந்தபோது உடன் வந்த சிறுவனுடன் அவர் திடீரென அவசர அவசரமாக வெளியே செல்கிறார். வெளியே செல்லும்போது ஒரு பையுடன் செல்கிறார்.

எனவே, குழந்தையை அந்தப் பையில் வைத்து அவர் எடுத்துச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தொடர்ந்து, வேலூர் - திருவண்ணாமலை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கண்காணித்ததில் இடையன்சாத்து வரை அந்தப் பெண் செல்வது தெரியவந்தது. அதன் பிறகு எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதையடுத்து, குழந்தையை கடத்திய அந்த பெண்ணை கண்டுபிடிக்க டிஎஸ்பி-யான திருநாவுக்கரசு தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.

மருத்துவமனை நிர்வாகத்தினர் குழந்தை கடத்தப்படுவதை தடுக்க போதிய கவனம் செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அது குறித்தும் விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனை தரப்பு விளக்கம்: இது குறித்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் விசாரித்த போது, "குழந்தையை கடத்திச் செல்வதை தடுக்க மருத்துவமனையில் RFID தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தக் குழந்தையின் கையில் இருந்த டேகை பெற்றோர் கழற்றி கீழே வைத்துள்ளனர். அதனால் குழந்தை வெளியே செல்லும் போது எச்சரிக்கை மணி ஒலிக்கவில்லை. இருந்த போதும் பணியில் கவனக்குறைவாக இருந்த காவலாளி மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். பிரசவ வார்டில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளோம்" என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இதே மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி இதே வார்டில் இருந்து, பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டது. அப்படிக் கடத்தப்பட்ட நான்கு மணி நேரத்தில் காவல் துறையினரால் அக்குழந்தை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x