Last Updated : 31 Jul, 2024 11:49 AM

 

Published : 31 Jul 2024 11:49 AM
Last Updated : 31 Jul 2024 11:49 AM

சென்னை: ஆட்டோவில் தவறவிட்ட நகையை மீட்டுக் கொடுத்த போக்குவரத்து போலீஸார் - தம்பதி நன்றி

தம்பதியர்

சென்னை: ஆட்டோவில் ஐந்தரை சவரன் நகையை ஒரு தம்பதியினர் தவறவிட்ட நிலையில், அதை மீட்டுக் கொடுத்த போக்குவரத்து போலீஸாருக்கு அவர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.

சென்னை மாதவரம் புற்றுக்கோயில் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ்- தீபா தம்பதி. தங்களிடம் உள்ள ஐந்தரை சவரன் பழைய நகையை சௌகார்பேட்டை வீரப்பா தெருவில் உள்ள நகைக் கடையில் கொடுத்துவிட்டு, புதிய நகை வாங்குவதற்காக மாதவரத்தில் இருந்து சவுகார்பேட்டைக்கு ரேபிடோ ஆட்டோவில் நேற்று நண்பகல் 12.30 மணிக்கு வந்தனர்.

இறங்கும்போது நகை இருந்த பையை ஆட்டோவில் இருந்து எடுக்க மறந்து விட்டனர். ஆட்டோ டிரைவரும் அதைக் கவனிக்காமல் புறப்பட்டுச் சென்று விட்டார். சற்றுநேரம் கழித்து, நகைப் பையை தவறவிட்டதை அறிந்து பதறிப்போன தீபா, யானைக் கவுனி ஈ.பி. பாயின்டில் நின்ற போக்குவரத்து தலைமை காவலர் சதீஷ்குமாரிடம் நடந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து தலைமை காவலர் சதீஷ்குமார் ராபிடோ கஸ்டமர் சர்வீஸுக்கு போன் செய்து நடந்தவற்றை கூறி ஆட்டோவின் பதிவு எண், ஆட்டோ ஓட்டுநரின் செல்போன் எண் ஆகியவற்றை பெற்றுள்ளார். பின்னர் அந்த ஆட்டோ ஓட்டுநரை புழல் பெஞ்சமினை யானைக் கவுனி போக்குவரத்து காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளார்.

அந்த ஆட்டோவில் சதீஷ்- தீபா தம்பதி வைத்த இடத்தில் பை அப்படியே இருந்தது. நகைகளை சரி பார்க்கச் சொல்லி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவி மற்றும் தலைமை காவலர் சதீஷ்குமார் இருவரும் சதீஷ்- தீபா தம்பதியிடம் நகைப் பையை ஒப்படைத்தனர். நகை கிடைத்த மகிழ்ச்சியில் சதீஷ் - தீபா தம்பதியினர் கண்ணீர் மல்க போலீஸாருக்கு நன்றி தெரிவித்தனர். போலீஸார் அழைத்த சிறிது நேரத்திலேயே காவல் நிலையத்துக்கு வந்து நகையை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் பெஞ்சமினுக்கு போலீஸார் பாராட்டுத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x