Published : 31 Jul 2024 06:38 AM
Last Updated : 31 Jul 2024 06:38 AM

ரூ.70 கோடி போதை பொருள் பறிமுதல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்

கைதான சையது இப்ராஹிம்

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிக்கிய ரூ.70 கோடி மதிப்பு போதைப் பொருள் வழக்கில்கைதான சையது இப்ராஹிம் திமுகவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவருக்கும் ஏற்கெனவே போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) சென்னை மண்டல இயக்குநர் பி.அரவிந்தன் தலைமையிலான போலீஸார் கடந்த 24-ம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்தின்பேரில் ஒருவரை பிடித்துவிசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 5.970 கிலோ கிராம் எடைகொண்ட போதைப் பொருள் இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், அதை வைத்திருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசுல் ரஹ்மானை கைது செய்தனர்.

அவர் அளித்த தகவலின்பேரில், சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 954 கிராம் போதைப் பொருள் மற்றும் ரூ.7 லட்சம் பணத்தை கடந்த 28-ம் தேதி பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 6.924 கிலோ போதைப் பொருளின் சந்தை மதிப்பு ரூ.70 கோடியாகும். போலீஸாரின் தொடர் விசாரணையில் இந்த போதைப் பொருட்களை ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

மேலும், கைதான பைசுல் ரஹ்மான் அளித்த தகவலின்பேரில் சென்னையைச் சேர்ந்த மன்சூர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சையது இப்ராஹிம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களின் பின்னணி குறித்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரித்ததில் சையது இப்ராஹிம் திமுகவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கைதான சையது இப்ராஹிம் திமுகவில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் பொறுப்பில் இருந்துள்ளார். இந்த கும்பல் ஏற்கெனவே2 முறை போதைப் பொருட்களை கடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கடத்தப்படும் போதைப் பொருட்களை இங்கிருந்து பேருந்து மற்றும் கார்களில் ராமநாதபுரத்துக்கு கடத்திச் சென்று அங்கிருந்து கடல் வழியாக படகில் இலங்கைக்கு கடத்தியதையும் கண்டுபிடித்துள்ளோம்.

போதைப் பொருட்கள் கடத்திய வழக்கில் டெல்லியில் வைத்து ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்குக்கும், தற்போது பிடிபட்டுள்ள 3 பேர்கும்பலுக்கும் தொடர்பு உள்ளதாஎன்ற கோணத்திலும் தொடர்ந்துவிசாரணை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு கூறினர்.

துரைமுருகன் அறிவிப்பு: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான சையது இப்ராஹிம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு:

ராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுதுணைத் தலைவர் கா.சையது இப்ராஹிம் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவருடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x