Published : 31 Jul 2024 04:30 AM
Last Updated : 31 Jul 2024 04:30 AM
சென்னை: முதல்வர் இல்ல பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளரிடம் மது போதையில் ரகளையில் ஈடுபட்டதாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
இந்த வீட்டை சுற்றி, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படியாக செல்வோரிடம் போலீஸார் விசாரணை மேற்கொள்வார்கள். குற்றச் செயல்களில் ஈடுபடும் நோக்கத்துடன் வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
இந்நிலையில், கடந்த 28-ம் தேதிஇரவு 10.30 மணியளவில் முதல்வர் இல்லத்தில் 9-வது பாயின்டில் உதவி ஆய்வாளர் நரேந்திரன் தலையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கைதுக்கு நியாயம் கேட்டார்: அப்போது, அங்கு மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர், ``என்னுடைய நண்பர் ராஜேந்திரனை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து விட்டீர்களா? உங்களை சும்மா விடமாட்டேன்'' எனக் கூறி, ரகளையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸார்விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட இளைஞரிடம் விசாரித்தனர். இதில், அவர் தேனாம்பேட்டை பக்தவச்சலம் தெருவைச் சேர்ந்த, ஆன்லைன் மூலம் பொருட்களை விநியோகம் செய்யும் தனியார் நிறுவன ஊழியரான சுரேஷ்(33) என்பது தெரியவந்தது.
கடந்த 26-ம் தேதி முதல்வர்பாதுகாப்பு அரணை மீறி ஆட்டோவில் சென்ற, தேனாம்பேட்டையைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்திருந்தனர். அதில், ஒருவர் சுரேஷின் நண்பர் ராஜேந்திரன். இந்த கைதுக்கு நியாயம் கேட்டேசுரேஷ் முதல்வர் இல்ல பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT