Published : 30 Jul 2024 04:40 PM
Last Updated : 30 Jul 2024 04:40 PM
சென்னை: யூடியூபர் ‘பிரியாணி மேன்’ மீது பாரதிய நியாய சன்ஹிதா, ஐடி சட்டம், பெண்களை இழிவுபடுத்துதல் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டல கணினிசார் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் (South Zone Cyber Crime) தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று (ஜூலை 29) கொடுத்த புகாரில், தான் தினந்தோறும் காலையில் நடைபயிற்சி செய்யும் செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமான உடல்மொழி சைகைகளை வீடியோ பதிவு செய்து அந்தக் காணொலியை யூடியூபில் பதிவேற்ற செய்துள்ள ‘பிரியாணி மேன்’ என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் அபிஷேக் ரபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலையத்தில், BNS Act, IT Act, Indecent Representation of Women (Prohibition) Act மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு, செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசமான உடல் அசைவு சைகைகளைக் காட்டி, கொச்சை வார்த்தைகளுடன் யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்த அபிஷேக் ரபியை (29), போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
விசாரணைக்குப் பின்னர், அபிஷேக் ரபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT