Last Updated : 29 Jul, 2024 07:04 PM

2  

Published : 29 Jul 2024 07:04 PM
Last Updated : 29 Jul 2024 07:04 PM

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 கோடி மதிப்பினான போதைப் பொருள் பறிமுதல்: 3 பேர் கைது @ சென்னை

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

சென்னை: தமிழகத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (சென்னை மண்டலம்) மண்டல இயக்குநர் பி.அரவிந்தன் தலைமையிலான போலீஸார் (என்சிபி) தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்புப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக என்சிபி பிரிவு போலீஸார் கடந்த 24-ம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த நபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து, அவர் வைத்திருந்த பையை சோதித்தபோது அதில் 5.970 கிலோ கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், போதைப் பொருளை வைத்திருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசுல் ரஹ்மான் என்பவரை கைது செய்தனர்.அவர் கொடுத்த தகவலின்பேரில் சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 954 கிராம் மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை இன்று பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்

போலீஸாரின் தொடர் விசாரணையில் போதைப் பொருட்களை ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டது தெரியவந்தது. போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்ட பைசுல் ரஹ்மான் அளித்த தகவலின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த மன்சூர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த இப்ராகிம் ஆகிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மொத்தம் 6.924 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.70 கோடி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x