Published : 29 Jul 2024 06:22 PM
Last Updated : 29 Jul 2024 06:22 PM

சந்தியாவின் தரகராக செயல்பட்ட  பெண்ணின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

சந்தியா | கோப்புப் படம்

சென்னை: பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண் சந்தியாவுக்கு உடந்தையாகவும், தரகராகவும் செயல்பட்ட தமிழ்செல்வியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த மகேஷ் அரவிந்த் தனது திருமணத்துக்காக ஆன்லைன் மூலமாக பெண் தேடி வந்தார். அப்போது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா என்ற இளம்பெண் அவருக்கு அறிமுகமானார். தொடர்ந்து, இருவரும் பழகி காதல் வயப்பட்டதால், மகேஷ் அரவிந்த் தனது வீட்டுக்குத் தெரியாமல் சந்தியாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனது பெற்றோர் ஏற்றுக்கொண்ட நிலையில் மகேஷ் அரவிந்த், சந்தியாவுடன் தனது வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார்.

அப்போது குடும்ப அட்டையில் சந்தியாவின் பெயரை இணைக்க முயன்றபோது சந்தியா ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்ற விவரம் தெரியவந்தது. இதையடுத்து சந்தியா தலைமறைவாகி விட்டார். இதுதொடர்பாக மகேஷ் தாராபுரம் போலீஸில் புகார் அளித்தார். போலீஸாரின் விசாரணையில் சந்தியா காவல்துறை அதிகாரி முதல் தொழிலதிபர்கள் வரை என 53 பேரை ஏமாற்றி திருமணம் செய்து பணம், நகைகளை அபகரித்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, புதுச்சேரியில் பதுங்கியிருந்த சந்தியாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சந்தியாவின் இந்த திருமண மோசடிகளுக்கு உடந்தையாகவும், தரகராகவும் செயல்பட்ட தமிழ்செல்வி என்ற பெண்ணையும் போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி தமிழ்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சந்தியாவால் பாதிக்கப்பட்ட 43-வது கணவரான மகேஷ் அரவிந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ்குமார், “இதுவரை 53 பேரை திருமணம் செய்துள்ள சந்தியாவுக்கு, அவரது தோழியான தமிழ்செல்விதான் உடந்தையாகவும், தரகராகவும் செயல்பட்டுள்ளார். எனவே, திட்டமிட்டு பலரை ஏமாற்ற உதவிய தமிழ்செல்விக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது. மோசடிப் பேர்வழியான சந்தியாவை திருமணம் செய்ததால், மகேஷின் தாத்தா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்,” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “போட்டோவை பார்த்தவுடன் ஓகே சொல்லிட்டீங்களா? திருமணம் செய்யும் முன்பாக யார், என்ன என்பது குறித்து விசாரிக்கவில்லையா?” என கேள்வி எழுப்பினார். காவல் துறை தரப்பில், வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சந்தியா பலரை திருமணம் செய்து மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தியாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். அவருடைய தோழி தமிழ்செல்வியை தேடி வருகிறோம் என தெரிவிக்கப்பட்டது. அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, சந்தியாவுக்கு உடந்தையாக செயல்பட்ட தரகரான தமிழ்செல்வியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x