Published : 29 Jul 2024 05:45 AM
Last Updated : 29 Jul 2024 05:45 AM

சென்னை | காணாமல் போனதாக கூறப்பட்ட 70 வயது மூதாட்டி; பணத்துக்காக கொலை செய்யப்பட்டு கால்வாயில் மூட்டை கட்டி வீசப்பட்டது அம்பலம்

பார்த்திபன் , சங்கீதா

சென்னை: காணாமல் போனதாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த மூதாட்டி நகை, பணத்துக்காக கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் சடலம் கட்டப்பட்டு கழிவு நீர் கால்வாயில் வீசப்பட்டது கண்டறியப்பட்டது. இக்கொலை தொடர்பாக கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.

சென்னை எம்ஜிஆர் நகர், மயிலம் சிவமுத்து தெருவைச் சேர்ந்தவர் விஜயா(70). சித்தாள் வேலை செய்து வந்தார். இவருக்கு லோகநாயகி என்ற மகள்உள்ளார். மகளுக்கு திருமணமாகி அதே பகுதியில் கணவர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி முதல் விஜயா மாயமானார்.

இதுகுறித்து எம்ஜிஆர் நகர் போலீஸார் விசாரித்தனர். அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், விஜயா வசித்து வந்தவளாகத்தில் வசித்த பார்த்திபன் (32), அவரது மனைவி சங்கீதா (28) ஆகிய இருவரும் விஜயாவீட்டுக்கு வந்து சென்றதும், மறுநாள் இருவரும் அங்கிருந்த சாக்கு மூட்டையுடன் வெளியேறுவதும் தெரியவந்தது. மேலும், அதே மூட்டையுடன் இருசக்கர வாகனத்தில் செல்வதும் தெரியவந்தது.

இருவரிடமும் விசாரிக்க சென்றபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இருவரும் விருதுநகரில் பதுங்கி இருந்தது கண்டறியப்பட்டது. போலீஸார் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில், நகை, பணத்துக்காக மூதாட்டி விஜயாவை கொலைசெய்து, சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள பாலத்தின் கீழே உள்ள சாக்கடையில் வீசியதாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாக்குமூலம்: கைதான பார்த்திபன் அளித்துள்ள வாக்குமூலம்: நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டோம். பி.டெக் முடித்துள்ளேன். சரியான வேலை கிடைக்கவில்லை. 7 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. மாதம் ரூ.4,500 வீட்டு வாடகை கொடுக்க வேண்டும். பொருளாதார பிரச்சனையால் கடன் பெற்று குடும்பம் நடத்தினேன். கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மேலும் தடுமாறினேன்.

மூதாட்டி விஜயா எப்போதும் தங்க நகை அணிந்திருப்பதோடு, அவரது சுருக்குப் பையில் எப்போதும் பல ஆயிரக்கணக்கான பணம், தங்க நகைகள் இருக்கும். எனவே, அவரை கொலை செய்து கொள்ளையடித்து கடன்களை அடைக்க திட்டமிட்டோம்

சம்பவத்தன்று விஜயா வீட்டுக்கு நானும், மனைவியும் சென்று மூதாட்டியிடம் இருந்து சுருக்குப் பையை பறிக்க முயன்றபோது அவர் கூச்சலிட்டார். இதையடுத்து, அவரது கழுத்தில் காலால் மிதித்து கொலை செய்தேன்.

சடலத்தை எனது வீட்டுக்கு எடுத்து வந்து, அவர் அணிந்திருந்த தங்க நகை, சுருக்கு பையில் இருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை எடுத்தேன். அன்று இரவு ஒரு சாக்கு பையில்விஜயாவின் சடலத்தை மூட்டையாக கட்டி ஜோன்ஸ் சாலையில் உள்ள கழிவு நீர் கால்வாயில் வீசினோம். இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x