Published : 27 Jul 2024 04:20 AM
Last Updated : 27 Jul 2024 04:20 AM
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 17 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
கொலைக்காக ரூ.1 கோடி வரை பணம் கைமாறிய விவகாரமும் வெளியானது. கொலையாளிகள், பணத்தை கைமாற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், திரை மறைவிலிருந்து மூளையாகச் செயல்பட்டு, திட்டமிட்டு, பணம் மற்றும் சட்ட உதவி செய்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய புலனாய்வு முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அதன்படி பொன்னை பாலு, ராமு, அருள் ஆகிய 3 பேரையும் 2-வது முறையாக 3 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப் (28) என்பவரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்துகைது செய்யப்பட்டோர எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.
தற்போது கைது செய்யப்பட்ட பிரதீப்தான் ஆம்ஸ்ட்ராங்கின் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கவனித்து தகவல்தெரிவித்து வந்துள்ளார். குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் புதிதாக கட்டி வரும் பெரம்பூரில் உள்ள வீட்டை எப்போது பார்க்க வருவார், எந்த இடத்தில் நின்றவாறு மேற்பார்வை செய்வார், அவருடன் யார் யார் வருவார்கள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்திருப்பாரா போன்ற ரகசிய உளவுத் தகவல்களையும் தெரிவித்து வந்துள்ளார்.
பிரதீப் கொடுத்த துல்லியமான தகவல்கள் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பெருமளவில் உதவியுள்ளது. கடந்தாண்டு பட்டினப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ், தற்போது கைது செய்யப்பட்ட பிரதீப்புக்கு சித்தப்பா முறை என போலீஸார் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT