Published : 26 Jul 2024 06:14 AM
Last Updated : 26 Jul 2024 06:14 AM

சென்னை | கணவனை கொலை செய்த மனைவி கைது

சென்னை: துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிகொலை செய்துவிட்டு, உடல்நலக் குறைவால் இறந்ததாக நாடகமாடிய மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் 57-வது தெருவைச் சேர்ந்தவர் கவுஷ்பாஷா (48). துப்புரவுப் பணி செய்து வந்தார். இவருக்கு ஷாஜிதாபானு (38) என்ற மனைவியும், மகன், மகள் உள்ளனர்.

கடந்த பிப். 28-ம் தேதி கவுஷ்பாஷா அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்தார். தகவல் அறிந்து, வில்லிவாக்கம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கவுஷ்பாஷா இறப்பு குறித்து அவரது மனைவி ஷாஜிதாபானுவிடம் போலீஸார் விசாரித்தபோது, கணவர் கவுஷ்பாஷாவுக்கு ஏற்கெனவே பல உடல்நல பாதிப்புகள் இருந்தன. இதனால் கணவர் இறந்ததாகத் தெரிவித்தார். அவரது பேச்சில் சந்தேகம் இருந்ததால், இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.கவுஷ்பாஷா மரணம் குறித்து அவரது பெற்றோரும் சந்தேகம் எழுப்பினர்.

இந்நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கவுஷ்பாஷா கழுத்து இறுக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் ஷாஜிதா பானுவிடம் போலீஸார் மீண்டும் நடத்தியவிசாரணையில், கணவரை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு,நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றக் காவலில்சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கொலை தொடர்பாக போலீஸார் கூறியதாவது: கணவர் பணிக்குச் சென்ற பின்னர் ஷாஜிதாபானு, ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு, ஷாஜிதாபானு தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பிள்ளைகளின் எதிர்காலம் கருதி ஷாஜிதாபானுவின் பெற்றோர் சமாதானம் பேசி கணவருடன் சேர்த்து வைத்துள்ளனர்.

தனது கணவர் வீட்டுக்கு வந்த பிறகும் ஷாஜிதாபானு ஆண் நண்பர்களுடனான நட்பை துண்டிக்கவில்லையாம். மேலும், பாலியல் வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று வெளியே வந்துள்ளார்.

இது தொடர்பாக சம்பவத்தன்று காலையில் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த ஷாஜிதாபானு கணவரை சரமாரியாகத் தாக்கிவிட்டு, துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர், உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்து நாடகமாடி உள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கையால் அத்தனை உண்மைகளும் வெளியானது என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x