Published : 22 Jul 2024 04:56 PM
Last Updated : 22 Jul 2024 04:56 PM
கோவை: கோவையில் கல்வி நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்களிடம் இ-சிகரெட் பயன்பாடு அதிகரித்து வருவதாக புகார்கள் வருவதைத் தொடர்ந்து, கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டோர் சுமார் 26 கோடி பேர் புகையிலை பயன்படுத்துவதாக, உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. புகையிலை பொருட்களான சிகரெட், பீடி மற்றும் ஹான்ஸ் பயன்படுத்துவதால் உடலுக்கு பலவித நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. பீடி, சிகரெட்டுகளை பயன்படுத்துபவர்கள் மட்டுமின்றி, அவர்கள் வெளியே விடும் புகையை சுவாசிக்கும் மற்றவர்களுக்கும் வாய், நுரையீரல் புற்று நோய் அபாயமும், ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை பாதிக்கும் அபாயமும் உள்ளது. இதனால் இ-சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விநியோகம், விற்பனை, சேமித்து வைத்தல், விளம்பரம் உட்பட இ-சிகரெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்படுவதாக கடந்த 2019-ல் மத்திய அரசு அறிவித்தது.
இருந்த போதிலும் பரவலாக ஆன்லைன் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவோர் இ-சிகரெட்டை பயன்படுத்தி வருகின்றனர். பேட்டரியில் இயங்கும் வகையில் பேனா உட்பட பல்வேறு வடிவங்களில் இ-சிகரெட்கள் கிடைக்கின்றன. சிகரெட் புகையிலைக்குப் பதிலாக இ-சிகரெட்டில் திரவ நிலையில் நிகோடின் புகையை உள் இழுத்து வெளியே விடுவதால் புகைப் பிடிக்கும் அதே உணர்வை பெற முடியும். இது‘வேப்பிங்’ எனப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து நிகோடின் திரவம் சப்ளை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, சுகாதார துறை அதிகாரிகள் கூறும்போது, “கோவை மாவட்டத்தில் சரவணம்பட்டி பகுதியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இப்பகுதியில் கடந்த 8 மாதங்களாக இ-சிகரெட் பயன்பாடு அதிகரித்துள்ளதாக காவல்துறை மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது. இ-சிகெரட் பயன்பாட்டை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறும்போது, “இ-சிகரெட் பயன்பாடு அதிகரிப்பதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இ-சிகரெட் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட சுகாதார துறையின் புகையிலை கட்டுப்பாட்டு திட்ட பிரிவும், காவல்துறையும் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT