Last Updated : 17 Jul, 2024 09:37 PM

 

Published : 17 Jul 2024 09:37 PM
Last Updated : 17 Jul 2024 09:37 PM

சுற்றுலா பேக்கேஜ் விளம்பரம் செய்து ஏமாற்றிய ஹரியாணாவை சேர்ந்த இருவர் கைது @ புதுச்சேரி 

ஆன்லைனில் சுற்றுலா பேக்கேஜ் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட ஹரியாணாவைச் சேர்ந்த இருவரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி: சுற்றுலா பேக்கேஜ் விளம்பரம் செய்து ஏமாற்றியதாக இந்தியா முழுவதும் 42 வழக்குகளில் தொடர்புடைய ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த அஜய் மேளா மற்றும் ஒசாமா கான் இருவரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் இன்று கைது செய்தனர்.

ஆன்லைனில் டூரிஸ்ட் பேக்கேஜ் விளம்பரம் வந்துள்ளது. அதில் 85,000 ரூபாய் பணம் செலுத்தினால் ஓர் ஆண்டு பிரீமியம் அடிப்படையில் இந்தியாவில் இருக்கிற சுற்றுலா தலங்களில் எங்கு வேண்டுமானாலும் குறைந்தபட்சம் ஐந்து நாட்கள் இலவசமாக தங்குமிடம் உணவு, போக்குவரத்து வசதிகளை ஆகியவை அடங்கும் என டூரிஸ்ட் பேக்கேஜில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஹரியானாவில் கம்பெனி வைத்திருக்கும் கேஐஎச் வெக்கேசன் கிளப் (KIH Vacation Club) என்ற நிறுவனம் விளம்பரம் செய்திருந்தது.

இவர்களை புதுச்சேரியைச் சேர்ந்த ராகுல்கிருஷ்ணா கடந்த 2023-ல் தொடர்புகொண்டபோது மிக குறைந்த விலையில் ஆண்டுக்கு பத்து நாட்கள் குறிப்பிட்ட மலைவாழ் சுற்றுலாத் தளங்களுக்கு சென்று வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமைத்து தருகிறோம் என்று கூறியுள்ளனர்.இதை நம்பி ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் பணத்தை இணைய வழியில் செலுத்தி இருக்கிறார். அப்படி பணத்தை செலுத்தி எட்டு மாத காலமாகியும், அவருக்கு எந்த ஒரு இடத்துக்கும் சென்று தங்கி வருவதற்கான சுற்றுலா வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

இதுதொடர்பாக, ராகுல் கிருஷ்ணா கொடுத்த புகார் சம்பந்தமாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது புகார் கொடுக்கப்பட்டுள்ள கிளப் நடத்தியவர்கள் மீது இந்தியா முழுவதும் பல்வேறு வழக்குகள் பதிவாகியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோரின் தலைமையில் சிறப்பு படை தலைமை காவலர் மணிமொழி, போலீஸார் அரவிந்தன், துளசிதாசன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதில் இந்தியா முழுவதும் 42 வழக்குகளில் தொடர்புடைய ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த அஜய் மேளா, ஒசாமா கான் ஆகியோரை இன்று கொடைக்கானலில் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். அவர்களது வங்கி கணக்குகளையும் போலீஸார் முடக்கினர்.சம்பந்தப்பட்ட இருவரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இருவர் மீதும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் புகார் பதிவு செய்யப்பட்டு இருப்பதும், கொடைக்கானல், கர்நாடகா, கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அவர்களை கைது செய்து இருப்பதும் தெரிய வந்தது.இதுகுறித்து, புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் கூறுகையில், “இணைய வழியில் வருகின்ற விளம்பரங்களை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்,” என பொது மக்களுக்கு அறிவுறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x