Published : 17 Jul 2024 05:57 AM
Last Updated : 17 Jul 2024 05:57 AM

ஆவடி | திருமழிசை தனியார் நிறுவனத்தில் பங்குதாரரிடம் ரூ.27 கோடி மோசடி: ஒருவர் கைது

ஆவடி: நாகப்பட்டினம் மாவட்டம், ஆலியூர்பகுதியை சேர்ந்தவர் அகமது கபீர்(56). இவர், கடந்த 1996-ம் ஆண்டுசிங்கப்பூரில் பணியாற்றிய போது,அங்கு பணியாற்றி வந்த மலேசியாவைச் சேர்ந்த செல்வேந்திரன் என்பவர் அறிமுகம் ஆனார்.

இதைத் தொடர்ந்து அகமது கபீர், செல்வேந்திரன், சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த காதர் ஆகிய 3 பேரும் சேர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே திருமழிசை தொழிற்பேட்டையில் மின்சார வயர் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினர்.

நிறுவனத்தை நிர்வகிப்பதில், படிப்படியாக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய நிலையில், இறுதியாக காதர் 50 சதவீதம், அகமது கபீர், செல்வேந்திரன் ஆகிய இருவரும் சேர்த்து 50 சதவீதம் தொகையை பிரித்துக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் செல்வேந்திரன், பாஸ்கர் என்பவர் மூலம் நிறுவனம் தொடர்பான முடிவுகளை தன்னிச்சையாக எடுத்து, தனது பங்குதாரரான அகமது கபீர் போன்று ஆவணங்களில் பாஸ்கரை வைத்து போலியாக கையொப்பமிட்டு சுமார் ரூ.27 கோடி வரை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சமீபத்தில் அகமது கபீர் ஆவடி காவல் ஆணையரகம்- மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவின் போலி ஆவண தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

அந்த விசாரணையின் அடிப்படையில், ரூ.27 கோடி மோசடி தொடர்பாக நாகப்பட்டினம் மாவட்டம், புலியூர், ராமர் மடம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (56) என்பவரை நேற்று முன் தினம் போலீஸார் கைது செய்தனர். செல்வேந் திரனை தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x