Published : 14 Jul 2024 04:28 PM
Last Updated : 14 Jul 2024 04:28 PM

ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது ஏன்? - காவல்துறை விளக்கம்

என்கவுன்ட்டர் நடந்த இடம் மற்றும் கொல்லப்பட்ட ரவுடி திருவேங்கடம்

சென்னை: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில், "கடந்த 05.07.2024 அன்று, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது) கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், குன்றத்தூரை சேர்ந்த 33 வயதான திருவேங்கடம் உட்பட 11 நபர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட திருவேங்கடம் உட்பட 11 நபர்கள் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். இவர் மேற்கண்ட கொலை வழக்கு தவிர இரண்டு கொலை வழக்குகள் மற்றும் வழிப்பறி, கொடுங்காய வழக்கு ஆகிய ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று 14.07.2024 தேதி அதிகாலை, போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடத்தை வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற அவர் தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்.

அவ்வாறு அழைத்து செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தை நிறுத்தியபோது, பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு திருவேங்கடம் தப்பி ஓடிவிட்டார். உடனடியாக பாதுகாவலாக சென்ற காவலர்கள் அவரை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை. புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தபோது, தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார்.

உடனடியாக காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த எதிரி உடனடியாக மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக M3 புழல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நீதிமன்ற விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது." என்று விளக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x