Published : 13 Jul 2024 08:17 PM
Last Updated : 13 Jul 2024 08:17 PM
ராமநாதபுரம்: பரமக்குடியில் ரூ.52.92 லட்சம் ஹவாலா பணத்தை கைப்பற்றி, அதை கடத்தி வந்த 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணைக்குப் பின் அவர்கள் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காந்தி நகர் காவல் சோதனைச் சாவடியில் இன்று காலை மதுவிலக்கு போலீஸ்காரர்கள் ராஜீவ்காந்தி, முத்துமணி ஆகியோர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சோதனைச்சாவடி அருகே இருவர் சந்தேகப்படும் வகையில் இரு பைகளை கைமாற்றி உள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த மதுவிலக்கு போலீஸார், அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூரைச் சேர்ந்த பிரபாகரன்(27), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வளையனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கவிதாஸ் (30) எனத் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து இரண்டு பைகளில் இருந்த ரூ.52 லட்சத்து 92 ஆயிரத்து 200-ஐ பறிமுதல் செய்து எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், பரமக்குடி டிஎஸ்பி-யான சபரிநாதன் மற்றும் போலீஸார் இரண்டு பேரிடமும் விசாரணை செய்தனர். இந்த பணப்பரிமாற்றத்தில் இளையான்குடி புதூரைச் சேர்ந்த பன்னீர் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து அவரையும் பிடித்து விசாரித்தனர்.
மேலும் விசாரணையில், பிரபாகரன் இளையான்குடியில் நகைக்கடை நடத்தி வருவதாகவும், வாரத்திற்கு ஒருமுறை கவிதாஸிடம் அதிகளவில் பணம் கொடுத்து, பரமக்குடியில் உள்ள ஒரு சிலரிடம் பிரித்துக் கொடுக்கச் சொல்வதாகவும் அவர்கள் கூறினர். அவர்களிடம் இருந்து ரூ. 52.92 லட்சம், செல்போன்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றினர். இதையடுத்து போலீஸார் கைப்பற்றப்பட்ட பணம், பொருட்களுடன் பிரபாகரன், கவிதாஸ், பன்னீர் ஆகிய மூவரையும் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஹவாலா பணத்தை பிடித்த போலீஸார் இருவரையும் எஸ்பி பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT