Published : 10 Jul 2024 05:40 AM
Last Updated : 10 Jul 2024 05:40 AM
ஹைதராபாத்: சீனாவைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகளால் கடத்தப்பட்டு 3 ஆயிரம் இந்தியப் பெண்கள் கம்போடியா நாட்டில் அடிமையாக இருக்கும் விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. இத்தகவலை அங்கிருந்து இந்திய தூதரக அதிகாரிகளால் மீட்கப்பட்ட ஐ.டி. இன்ஜினீயர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்ததகவல் தொழில்நுப நிபுணர் முன்ஷி பிரகாஷ் கூறியதாவது:
பி.டெக் பட்டதாரியான நான் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக தகவல்களைப் பதிவு செய்து வைத்திருந்தேன். இந்நிலையில் கம்போடியாவில் இருந்து விஜய் என்பவர் என்னைத் தொடர்புகொண்டு ஆஸ் திரேலியாவில் வேலைவாய்ப்பு இருப்பதாகக் கூறினார். இதற்காக மலேசியாவுக்கு வருமாறு கூறி அதற்கான டிக்கெட்களையும் அனுப்பினார்.
மார்ச் 12-ம் தேதி கோலாலம்பூர் சென்றபோது, அங்கிருந்து கம்போடிய நாட்டின் தலைநகர் நாம் பென் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். இந்நிலையில் அங்கு வந்த சீன கும்பல் என்னுடைய பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தது. அவர்கள் என்னை கிராங்பாவெட் நகருக்கு கடத்திச் சென்றனர். ஆட்களை கடத்தும் கும்பலிடம் சிக்கியது அப்போதுதான் தெரிந்தது.
அங்கு போலி பெயர்களில் பெண்களின் பெயரில் சமூக வலைதளப்பக்கங்கள் உருவாக்க எங்களுக்கு 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. தெலுங்கு உள்ளிட்ட இதரமொழிகளில் இந்த போலி பக்கங்களை உருவாக்க பயிற்சி தரப்பட்டது. தொடர்ந்து என்னை சித்தரவதை செய்தனர்.
பின்னர் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை குறித்து ஒரு செல்பிவீடியோவாக எடுத்து தமிழகத்தில் உள்ள எனது சகோதரிக்கு இ- மெயில் அனுப்பினேன். எனது சகோதரி சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்குத் தகவல் தந்ததன் மூலம் நான் தூதரக அதிகாரிகளால் மீட்கப்பட்டேன்.
ஆட்கடத்தல் நபர்களிடமிருந்து மீட்கப்பட்டபோதும், என் மீது கம்போடிய போலீஸார் வழக்கு பதிவு செய்து 12 நாட்கள் சிறையில் இருந்தேன். வழக்கு போலியானது என்று தெரிந்ததும், என்னை கடந்த 5-ம் தேதி டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். என்னுடன் சேர்த்து 10 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டனர்.
ஆந்திரா, தெலங்கானாவைச் சேர்ந்த 3 ஆயிரம் இந்தியர்கள் கம்போடியாவில் அடிமை போல சிறைபட்டு கிடக்கின்றனர். இதில் ஏராளமான கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகளும் அடங்குவர். அங்கு அடைத்து வைத்து நிர்வாணமாக வீடியோ கால்கள் செய்யுமாறு இந்திய சிறுமிகள் நிர்பந்திக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT