Last Updated : 08 Jul, 2024 02:49 PM

 

Published : 08 Jul 2024 02:49 PM
Last Updated : 08 Jul 2024 02:49 PM

தஞ்சை: வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.22 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் மீட்பு- மூவர் கைது

தஞ்சை: வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.22 கோடி மதிப்பிலான 6 ஐம்பொன் சிலைகளை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு குழு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு திருச்சி சிறப்பு குழுவினர் கடந்த 6-ம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது, 3 அடி உயர திரிபுராந்தகர், 2.75 அடி உயர வீணாதார தட்சிணாமூர்த்தி, 3.25 அடி உயர ரிஷப தேவர், தலா 2.75 அடி உயர மூன்று அம்மன் சிலைகள் என ஆறு உலோக சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும், காரை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (42), மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் ( 64), இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், லட்சுமணன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், புதிய வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் அமைக்க பள்ளம் தோன்றியுள்ளார். அப்போது ஆறு ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன. இது குறித்து அரசு அலுவலர்களுக்கு தெரிவிக்காமல் வீட்டில் மறைத்து வைத்திருந்தார்.

இது குறித்து தனது நண்பரான ராஜேஷ் கண்ணனிடம் தெரிவித்துள்ளார். பிறகு ராஜேஷ் கண்ணன் தனது நண்பரும், லட்சுமணனின் மருமகனுமான சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த திருமுருகன்(39), தெரிவித்துள்ளார். பிறகு, ராஜேஷ் கண்ணன் திருமுருகனுடன், லட்சுமணன் வீட்டிற்கு வந்து சிலைகளை பார்த்தார். பிறகு ராஜேஷ் கண்ணன், திருமுருகன், லட்சுமணன் மூவரும் ஐம்பொன் சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்க திட்டமிட்டனர்.இ

இதற்கிடையில், சமீபத்தில் ராஜேஷ் கண்ணனுக்கு சிலைகளை விற்கவும், வெளி நாடுகளுக்கு கடத்தவும் தொடர்பு கிடைத்தது. அதன்படி, ராஜேஷ் கண்ணனும், திருமுருகனும் கடந்த 5ம் தேதி நள்ளிரவு அவரது காரில் மயிலாடுதுறை கொருக்கை கிராமத்தில் உள்ள லட்சுமணன் வீட்டிலிருந்து, சிலைகளை எடுத்துக்கொண்டு திருச்சி வழியாக சென்னை செல்லும்போது பிடிபட்டனர்.

இது தொடர்பாக ராஜேஷ் கண்ணன், திருமுருகன், லட்சுமணன் மூவரையும் கைது செய்த போலீஸார் ஆறு சிலைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் மீட்கப்பட்ட சிலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x